"அதிமுகவில் பிளவு இல்லை; இபிஎஸ் தான் எங்களது பொதுச்செயலாளர்" - எஸ்.பி.வேலுமணி திடீர் பல்டி!

 
எஸ்.பி.வேலுமணி எஸ்.பி.வேலுமணி

சட்டமன்றத்தில் தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) முதலமைச்சர் விஜய்யின் அரசை ஆதரித்த விவகாரத்தில், அதிமுகவின் கொங்கு மண்டல முக்கிய மூத்த தலைவர்களான எஸ்.பி.வேலுமணி மற்றும் அவரது ஆதரவாளர்கள் 'தனிக்குழுவாக'ச் செயல்பட்டு வருவதாகவும், கட்சியில் பெரும் பிளவு ஏற்பட்டுள்ளதாகவும் அரசியல் வட்டாரத்தில் கடந்த சில நாட்களாகப் பலத்த விவாதங்கள் எழுந்து வந்தன.

இந்நிலையில், சென்னை எம்.ஆர்.சி. நகரில் உள்ள தனது இல்லத்தில் முன்னாள் அமைச்சர்கள் தங்கமணி, காமராஜ், கே.பி.அன்பழகன் ஆகியோருடன் கூட்டாகச் செய்தியாளர்களைச் சந்தித்த எஸ்.பி.வேலுமணி, இத்தகைய யூகங்களுக்கும் வதந்திகளுக்கும் முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் மிக முக்கியமான விளக்கங்களை அளித்துள்ளார்.

அதிமுக உடைந்துவிட்டதாகக் கூறப்படும் கருத்துகளை முற்றிலுமாக மறுத்த எஸ்.பி.வேலுமணி "அதிமுகவில் எந்தவிதமான பிளவும் இல்லை. ஒரு சில விஷயங்களில் கருத்து வேறுபாடுகள் மட்டுமே நிலவுகின்றன. இன்றும் எங்களது ஒரே பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தான் என்பதில் எவ்வித மாற்றுக்கருத்தும் இல்லை. கட்சியை உடைக்க வேண்டும், பிரிக்க வேண்டும் என்கிற எண்ணம் துளிகூட எங்களிடம் யாருக்கும் இல்லை. தலைமுறை தலைமுறையாக இந்த இயக்கத்தில் வளர்ந்தவர்கள் நாங்கள். மீண்டும் தமிழகத்தில் அதிமுக ஆட்சி அமைய வேண்டும் என்பதுதான் எங்களின் ஒற்றை நோக்கம்" என்று தெளிவுபடுத்தினார்.

சமீபத்திய தேர்தல் தோல்விகள் குறித்துப் பேசிய அவர், "அதிமுக இந்தத் தேர்தலில் தோல்வியைச் சந்தித்துள்ளது என்பதை நாங்கள் வெளிப்படையாக ஒப்புக்கொள்கிறோம். அதனைச் சரிசெய்வது குறித்தும், கட்சியைத் தொண்டர்கள் மத்தியில் மீண்டும் எப்படிப் பலப்படுத்துவது என்பது குறித்தும் தான் நாங்கள் தொடர்ந்து ஆலோசனை நடத்தி வருகிறோம். இந்தத் தோல்விகளுக்கான காரணங்களை வெளிப்படையாக விவாதிக்கவும், மறுஆய்வு மேற்கொள்ளவும் கட்சியின் பொதுக்குழுவைக் கூட்ட வேண்டும் என்றுதான் நாங்கள் வலியுறுத்துகிறோம்" என்றார்.

“இபிஎஸ் விஜயபாஸ்கர் எஸ்.பி.வேலுமணி எடப்பாடி

தவெக அமைச்சரவையில் தங்களுக்கு இடங்கள் கிடைக்காததால் ஏமாற்றம் அடைந்துள்ளதாக வெளியாகும் செய்திகளுக்கு அவர் ஆவேசமாகப் பதிலளித்தார்:

 "சி.வி.சண்முகமோ அல்லது நானோ பத்திரிகையாளர்களைச் சந்தித்த போது ஒருமுறை கூட தவெக அரசிடம் அமைச்சர் பதவி கேட்பதாகப் பேசவில்லை. தவெக தரப்பும் 'அதிமுகவினர் எங்களிடம் பதவி கேட்கவில்லை' எனத் தெளிவுபடுத்திவிட்டது. ஆனால், எங்களுக்குக் கெட்டப் பெயர் உண்டாக்க வேண்டும் என்றே சில ஊடகங்களும், சமூக வலைத்தளங்களும் திட்டமிட்டுப் பொய்யான தகவல்களைப் பரப்புகின்றன.

தவெக-வினர் எங்களைப் போலவே திமுக எதிர்ப்பு என்ற கொள்கை அடிப்படையில் மக்களைச் சந்தித்து ஆதரவு பெற்றுள்ளனர். மக்கள் ஆதரவு உள்ளதாலேயே அவர்களுக்குச் சட்டமன்றத்தில் ஆதரவளித்தோம். முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா அவர்களின் திட்டங்களான அம்மா உணவகம், தாலிக்கு தங்கம், அம்மா குடிநீர் மற்றும் 7.5% இடஒதுக்கீட்டை 10% ஆக உயர்த்துவது உள்ளிட்ட எங்களின் கோரிக்கைகளை புதிய முதலமைச்சரிடம் வைத்துள்ளோம்; அதற்காகவே இந்த ஆதரவு" என்று விளக்கினார்.

எஸ்.பி.வேலுமணி

ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமைக் கழக அலுவலகத்தை (தலைமையகம்) எஸ்.பி.வேலுமணி தரப்பினர் தங்களின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப் போவதாக எழுந்த தகவல்களுக்கும் அவர் மறுப்பு தெரிவித்தார். "கட்சி அலுவலகத்தைக் கைப்பற்றப் போவதாகக் கூறப்படுவதும் முற்றிலும் தவறான தகவல். தோல்வி குறித்து ஆராய்ந்து, கட்சியை மறுசீரமைப்பு செய்ய வேண்டும் என்பது மட்டுமே எங்களின் கோரிக்கை" என்று கூறி தனது பேட்டியை நிறைவு செய்தார்.

எஸ்.பி.வேலுமணியின் இந்தத் திடீர் விளக்கப் பேட்டி, அதிமுகவிற்குள் இருக்கும் உட்கட்சிப் பூசல்களையும், அதே வேளையில் இபிஎஸ்-ன் தலைமைக்குக் கட்டுப்பட்டு இருப்பதையும் ஒரே நேரத்தில் வெளிச்சத்திற்குக் கொண்டு வந்துள்ளது.