“சீமானுக்கு ஆதரவு கிடையாது; 5 தொகுதிகளிலும் திமுகவே போட்டியிடும்” - டிகேஎஸ் இளங்கோவன்!

 
அம்பாசமுத்திரம்  சீமான் டிகேஎஸ் இளங்கோவன்

அம்பாசமுத்திரம் உள்ளிட்ட காலியாக உள்ள 5 சட்டமன்றத் தொகுதிகளின் இடைத்தேர்தலில் திமுகவே நேரடியாகப் போட்டியிடும் என்றும், நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானுக்கு ஆதரவு அளிக்கும் எண்ணம் திமுகவுக்கு இல்லை என்றும் திமுக செய்தித் தொடர்புக் குழுத் தலைவர் டிகேஎஸ் இளங்கோவன் செய்தியாளர்களிடம் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.

அம்பாசமுத்திரம் தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிட விரும்பும் சீமான், திமுக அல்லது அதிமுக ஆதரவு அளித்தால் அதை ஏற்றுக்கொள்வதாகக் கூறியிருந்தார். இது குறித்துப் பேட்டியளித்த திமுக மூத்த தலைவர் டிகேஎஸ் இளங்கோவன், "திராவிட இயக்கத்திற்கு எதிராகவும், திமுகவைத் தொடர்ச்சியாகக் கடுமையாகவும் விமர்சித்து வருபவர் சீமான். எனவே, அம்பாசமுத்திரம் தொகுதியில் அவருக்கு ஆதரவு அளிக்கும் எண்ணம் திமுகவுக்கு சிறிதும் இல்லை. திமுகவிற்கே வெற்றி வாய்ப்பு பிரகாசமாக உள்ள நிலையில், நாங்கள் ஏன் அவரை ஆதரிக்க வேண்டும்?" எனக் கேள்வி எழுப்பினார்.

சீமான் அம்பை அம்பாசமுத்திரம் இடைத்தேர்தல்

தமிழகத்தில் காலியாக உள்ள அம்பாசமுத்திரம், பெருந்துறை, விராலிமலை, கரூர் மற்றும் திருச்சி கிழக்கு ஆகிய 5 தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடைபெறவுள்ள சூழலில், இத்தொகுதிகள் அனைத்திலும் திமுகவே களமிறங்கும் என்று அவர் உறுதிபடக் கூறினார்.

மேலும், தற்போதைய அரசில் முதலமைச்சர் விஜய்யால் விலைவாசியைக் கட்டுப்படுத்த முடியவில்லை என்றும், மாநிலத்தின் சட்டம்-ஒழுங்கு நிலை சீர்குலைந்துள்ளதாகவும் அவர் சாடினார். இதன் காரணமாக நடைபெறவுள்ள இடைத்தேர்தல்களில் திமுக அபார வெற்றி பெற்று மீண்டும் எழுச்சி பெறும் என்று டிகேஎஸ் இளங்கோவன் நம்பிக்கை தெரிவித்தார்.

சீமான்

இடைத்தேர்தல் களம் சூடுபிடித்துவரும் நிலையில், சீமானுக்கு திமுக ஆதரவு அளிக்காது என்ற டிகேஎஸ் இளங்கோவனின் அதிரடி அறிவிப்பு அரசியல் வட்டாரத்தில் பெரும் விவாதப் பொருளாக மாறியுள்ளது.