சென்னையில் மழை பெய்த தடயமே இல்லை... விடிய விடிய சுழன்ற அதிகாரிகள், தூய்மை பணியாளர்கள்!
சென்னை மாநகராட்சியில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்து வரும் நிலையில், நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறையின் கூடுதல் தலைமைச் செயலாளர் ககன்தீப் சிங் பேடி, ஒருங்கிணைந்த கட்டளை மற்றும் கட்டுப்பாட்டு மையத்திற்கு நேரில் சென்று பார்வையிட்டுப் பணிகளை ஆய்வு செய்தார்.
நேற்று இரவு முதல் மழை தீவிரமடைந்த சூழலில், சென்னை மாநகராட்சி ஆணையர் மற்றும் மாநகராட்சி ஊழியர்களின் களப்பணிகள் மற்றும் தீவிரச் செயல்பாடுகள் சமூக வலைத்தளங்களில் பொதுமக்களின் பெரும் பாராட்டுகளைப் பெற்று வருகின்றன. சென்னையில் மழை பொழியும் போதெல்லாம், மழைப்பொழிவு அதிகமாக உள்ள பகுதிகளுக்கு நேரில் சென்று ஆணையர் பார்வையிட்டதுடன், தேங்கிய தண்ணீரை உடனடியாக வெளியேற்றுவதற்கான முன்னேற்பாடுகளையும் தீவிரமாக மேற்கொண்டார். மேலும், அப்பகுதி மக்களைச் சந்தித்து உரையாடி, அனைத்து மழைநீரும் விரைவாக வெளியேற்றப்படும் என்று உறுதியளித்து நம்பிக்கை அளித்தார்.

பொதுவாகக் கே.கே. நகர் போன்ற தாழ்வான பகுதிகளில் லேசான மழை பெய்தாலும் தண்ணீர் வடிவதற்குச் சில நாட்கள் ஆகும் நிலையில், தற்போதைய தொடர் நடவடிக்கைகளால் அப்பகுதியில் ஒரு சொட்டு தண்ணீர் கூட தேங்காதவாறு முழுமையாக அகற்றப்பட்டுள்ளது. அதேபோல், வடசென்னையில் ஆங்காங்கே ஒரு சில இடங்களில் மட்டுமே லேசாகத் தேங்கியிருந்த மழைநீரும் தற்போது முழுமையாக வெளியேற்றப்பட்டு விட்டதாகச் சென்னை மாநகராட்சி ஆணையர் தெரிவித்துள்ளார்.
நேற்று இரவு முதல் தற்போது வரை சுமார் பதினைந்தாயிரத்திற்கும் மேற்பட்ட மாநகராட்சிப் பணியாளர்கள் சுழற்சி முறையில் தொடர்ந்து களத்தில் இறங்கி மழைநீர் அகற்றும் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
