தர்ம தரிசன முறையில் மாற்றம் கூடாது... மதுரை மீனாட்சி அம்மன் கோவில் நிர்வாகத்திற்கு வலியுறுத்தல்!
உலகப் புகழ்பெற்ற மதுரை அருள்மிகு மீனாட்சி சுந்தரேசுவரர் திருக்கோவிலில் பல ஆண்டுகளாகப் பின்பற்றப்பட்டு வந்த தர்ம தரிசன வரிசை முறையில் அண்மையில் கொண்டுவரப்பட்ட திடீர் மாற்றத்தைத் தவிர்க்க வேண்டும் என்றும், வழக்கம்போல காலை 5 மணி முதல் 6 மணி வரை பக்தர்களைத் தர்ம தரிசனத்திற்கு அனுமதிக்க வேண்டும் என்றும் கோரிக்கைகள் எழுந்துள்ளன.
மதுரை மீனாட்சி அம்மன் கோவில் நடை வழக்கம்போல் தினமும் அதிகாலை 4.30 மணிக்குத் திறக்கப்படுவது வழக்கம். அதன்பின்னர், காலை 5 மணி முதல் 6 மணி வரை கட்டணமின்றிச் சுவாமி மற்றும் அம்மனைத் தரிசிக்கும் வகையில் தர்ம தரிசன முறை பல ஆண்டுகளாகச் செயல்பட்டு வருகிறது.
இந்தத் தரிசனத்திற்காக அதிகாலையிலேயே நூற்றுக்கணக்கான உள்ளூர் மற்றும் வெளி மாவட்ட பக்தர்கள் நீண்ட வரிசையில் வந்து காத்திருந்து இறைவனை வழிபட்டு செல்வது பாரம்பரியமாக நடந்து வருகிறது. இந்தச் சமயத்தில் பொதுமக்களின் தரிசனத்திற்கு எவ்வித இடையூறும் இன்றி, கோவில் பணியாளர்கள் மற்றும் காவல்துறையினரின் எளிய முறைப்படுத்தலுடன் பக்தர்கள் அனுமதிக்கப்பட்டு வந்தனர்.

ஆனால், கடந்த சில நாட்களாக இந்தத் தர்ம தரிசன முறையில் திடீர் மாற்றங்கள் கொண்டுவரப்பட்டுள்ளதாகப் பக்தர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். இதுகுறித்து இந்து ஆலய பாதுகாப்பு இயக்கத்தின் மாநிலப் பொருளாளர் ஆதிசேஷன் செய்தியாளர்களிடம் விளக்கமளிக்கையில் கூறியதாவது:
"மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் அதிகாலை 5 மணி முதல் 5.30 மணி வரை கட்டணமில்லா தர்ம தரிசனம் பல ஆண்டுகளாகச் சீராக நடைமுறையில் இருந்தது. ஆனால், கடந்த ஒரு வார காலமாகத் தரிசன வரிசை முறையில் திடீர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இதன் காரணமாகக் கிழக்கு வாசல் வழியாக ஒரே ஒரு வரிசையில் மட்டுமே பக்தர்கள் அனுமதிக்கப்படுகிறார்கள்.

அதே நேரத்தில், மேற்கு கோபுரத்தின் வழியாக வரும் கட்டண தரிசன வரிசையானது காலை 5.30 மணி வரை எந்தவிதப் பயன்பாடும் இன்றித் காலியாகவே விடப்படுகிறது. முன்பு அந்த மேற்கு கோபுர வரிசையிலும் பக்தர்கள் அனுமதிக்கப்பட்ட நிலையில், தற்போது அது தடை செய்யப்பட்டுள்ளது. இதனால் ஒரே ஒரு வரிசையில் ஏராளமான பக்தர்கள் நீண்ட நேரம் காத்திருக்க வேண்டியுள்ளதுடன், தரிசன நேரமும் தேவையற்ற முறையில் அதிகமாகிறது" என்று அவர் தெரிவித்தார்.
பக்தர்களின் சிரமத்தைக் கருத்தில் கொண்டும், கூட்ட நெரிசலைக் கட்டுப்படுத்தவும் பழைய முறையையே மீண்டும் நடைமுறைப்படுத்த வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது. வழக்கம்போல இரண்டு வரிசைகளிலும் காலை 5 மணி முதல் 6 மணி வரை பக்தர்களைத் தர்ம தரிசனத்திற்குத் தடையின்றி அனுமதிக்க வேண்டும் எனவும், கோவில் நிர்வாகம் இதற்கான உரிய நடவடிக்கைகளை உடனடியாக மேற்கொள்ள வேண்டும் எனவும் பக்தர்கள் மற்றும் ஆன்மீக அமைப்பினர் கேட்டுக் கொண்டுள்ளனர்.
