“திமுகவில் இரட்டை நிலைப்பாடு கூடாது..” - கி.வீரமணி கடும் கண்டனம்!
திமுக பொதுச்செயலாளரும் அமைச்சருமான துரைமுருகன் இல்ல திருமண விழாவில் புரோகிதச் சடங்குகள் நடத்தப்பட்டதற்குத் திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி தனது கடுமையான கண்டனத்தைப் பதிவு செய்துள்ளார்.
பெரியார், அண்ணா, கலைஞர் போன்ற தலைவர்களின் படங்கள் வைக்கப்பட்டு, கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையிலேயே நடைபெறும் திருமண விழாக்களில், சுயமரியாதைக் கொள்கைகளுக்கு மாறாகப் புரோகிதச் சடங்குகள் நடத்தப்படுவது திமுகவின் வரலாற்றுப் பாரம்பரியத்திற்கு இழுக்காகும் என்று அவர் சாடியுள்ளார்.

திராவிட இயக்கக் கொள்கைகளைப் பேசும் ஆட்சியில், இதுபோன்ற கொள்கை முரண்பாடான இரட்டை நிலைப்பாடுகள் தொடர்வது அழகல்ல என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
திராவிடக் கொள்கைகளுக்கு எதிரான இதுபோன்ற நிகழ்வுகள் மற்றும் இரட்டை நிலைகள் இனிமேலும் தொடராமல் இருக்க, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் உரிய தலையீடு செய்து தடுத்து நிறுத்த வேண்டும் என கி.வீரமணி வலியுறுத்தியுள்ளார்.
