"100 நாளில் 546 குற்றங்கள்.. சர்க்கஸ் சர்க்காரின் சாதனை இது தானா?” - திமுக வழக்கறிஞர் பரந்தாமன்!

 
தமிழகம் விஜய் தலைமைச் செயலகம் தலைமை அரசு தமிழ்நாடு

சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்த திமுக சட்டத்துறை இணைச் செயலாளரும் எம்.எல்.ஏ.வுமான ஐ.பரந்தாமன், தமிழகத்தில் தவெக ஆட்சி அமைந்து 100 நாட்கள் நிறைவடைந்துள்ள நிலையில், மாநிலத்தில் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்துள்ளதாகக் கடுமையாகக் குற்றம் சாட்டியுள்ளார்.

தவெக அரசின் கடந்த 100 நாள் ஆட்சியில் மட்டும் மாநிலத்தில் 546-க்கும் மேற்பட்ட பெரிய குற்றச் சம்பவங்கள் பதிவாகியுள்ளதாகப் புள்ளிவிவரங்களுடன் அவர் தெரிவித்துள்ளார். கொலை, கொள்ளை, வழிப்பறி மற்றும் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் முன்னெப்போதும் இல்லாத வகையில் அதிகரித்து வருவதாகவும், காவல்துறை சுதந்திரமாகச் செயல்பட முடிவதில்லை என்றும் அவர் சாடினார்.

பரந்தாமன்

சிறைத்துறையில் காவல் மரணங்கள் அதிகரித்து வருவது குறித்தும், விசாரணைக் கைதிகளின் பாதுகாப்பு கேள்விக்குறியாகியிருப்பது குறித்தும் அரசு தெளிவான விளக்கம் அளிக்க வேண்டும் என வலியுறுத்தினார். 100 நாள் சாதனைப் புத்தகம் வெளியிட்டு விளம்பரம் தேடிக்கொள்ளும் அரசு, அடித்தட்டு மக்களின் பாதுகாப்பை முற்றிலும் மறந்துவிட்டது எனக் குற்றம் சாட்டினார்.

சட்டம் ஒழுங்கை உடனடியாகச் சீரமைக்கத் தவறினால் திமுக சார்பில் மாநிலம் தழுவிய தீவிரப் போராட்டங்கள் முன்னெடுக்கப்படும் என எச்சரித்துள்ளார்.