"பாட்டிலுக்கு ரூ.10க்கு முற்றுப்புள்ளி வைக்கப்படும்.. டாஸ்மாக் ஊழியர்களின் கோரிக்கை நியாயமானது" - அமைச்சர் விக்னேஷ்!
டாஸ்மாக் மதுபானக் கடைகளில் நிர்ணயிக்கப்பட்ட பில் தொகையை விட கூடுதலாகப் பத்து ரூபாய் வசூலிக்கப்படும் நடைமுறைக்கு மிக விரைவில் முழுமையாக முற்றுப்புள்ளி வைக்கப்படும் என அமைச்சர் விக்னேஷ் தெரிவித்துள்ளார்.
டாஸ்மாக் கடைகளின் செயல்பாடுகள் மற்றும் நிர்வாக ரீதியான சீர்திருத்தங்கள் குறித்துச் செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் விக்னேஷ், தமிழகத்தில் உள்ள டாஸ்மாக் கடைகளில் மதுபான பாட்டில்களுக்கு அரசு நிர்ணயித்த விலையை விட, ஊழியர்கள் தன்னிச்சையாகக் கூடுதலாக ரூ.10 வசூலிப்பதாகப் பொதுமக்கள் தரப்பிலிருந்து தொடர் புகார்கள் வந்த வண்ணம் உள்ளன. இந்த நடைமுறைக்கு விரைவில் முற்றிலும் முற்றுப்புள்ளி வைக்கப்படும்.
டாஸ்மாக் நிர்வாகத்தில் கொண்டு வரப்படவுள்ள புதிய சீர்திருத்தங்களால் சாதாரண மக்களுக்கு எவ்விதப் பாதிப்போ அல்லது கூடுதல் கட்டணச் சுமையோ ஏற்படாது. முழுக்க முழுக்க வணிக ரீதியானமற்றும் கணினிமயமாக்கப்பட்ட மாற்றங்கள் மட்டுமே கடைகளில் மேற்கொள்ளப்படும்.
"டாஸ்மாக் கடைகளில் பணிபுரிந்து வரும் தற்காலிக மற்றும் ஒப்பந்த ஊழியர்கள் முன்வைத்துள்ள ஊதிய உயர்வு மற்றும் பணி நிரந்தரம் உள்ளிட்ட கோரிக்கைகள் முற்றிலும் நியாயமானவை. அவர்களின் கோரிக்கைகள் மற்றும் வாழ்வாதாரம் குறித்து அரசு மிகவும் கனிவோடு பரிசீலனை செய்து வருகிறது. இதுகுறித்து உரிய ஆலோசனைகள் மேற்கொள்ளப்பட்டு விரைவில் நல்ல முடிவுகள் எடுக்கப்படும்" என்று அமைச்சர் உறுதியளித்துள்ளார்.
