’’நாப்கின் இல்லை”.. மாதவிடாய் தள்ளி போக அதிகளவில் மாத்திரை உட்கொள்ளும் காசா பெண்கள்..!!
காஸாவில் நடந்துவரும் போரால் பெண்கள் மாதவிடாய் காலத்திற்கு நாப்கின் இல்லாததால் மாதவிடாய் தள்ளிப்போக அதிகளவில் மாத்திரைகள் உட்கொண்டு வருவதாக தெரிவிக்கின்றனர்.
இஸ்ரேல் பாலஸ்தீனியத்தில் போர் நடந்துவரும் நிலையில், பாலஸ்தீனியத்தில் நிவாரணப் பொருட்கள் சென்றடைவதில் தடைகள் இருப்பதாக கடந்த பல வாரங்களாகவே குற்றச்சாட்டுகள் எழுந்தவண்ணம் உள்ளன. ஐ.நா உட்பட சர்வதேச அமைப்புகள், நாடுகள் பலவும் இதற்கு கண்டனம் தெரிவித்து வந்தன. இந்நிலையில் நிவாரணப் பொருட்கள் கிடைக்காததன் எதிரொலியாக, பாலஸ்தீனிய பெண்கள் பலரும் தங்கள் மாதவிடாய் காலத்தை தள்ளிப்போட மாத்திரைகள் உட்கொள்கின்றனர் என்றும், இந்த முடிவுக்கு அவர்கள் நிர்ப்பந்திக்கப்படுகின்றனர் என்றும் தற்போது அதிர்ச்சி தகவல் வெளிவந்துள்ளது.
முகாம்களில் தங்கவைக்கப்பட்டிருப்பது, வெவ்வேறு இடங்களுக்கு மாற்றப்படுவது, பல நூறு பேருக்கு மத்தியில் இருப்பது, தண்ணீர் பற்றாக்குறை, நாப்கின் - டேம்பான்ஸ் - மென்சுரல் கப் போன்றவை கிடைப்பதில் பிரச்னை போன்ற காரணங்களினால் அப்பெண்கள் இந்த முடிவுக்கு தள்ளப்பட்டுள்ளனர். மாதவிடாயை தள்ளிப்போடுவதற்கான மாத்திரைகள் போலவே, மாதவிடாய்க்கால வலியை தவிர்க்கும் ஹார்மோன் மாத்திரைகளையும் அவர்கள் உட்கொள்கின்றனராம்.
இதுபோன்ற மாத்திரைகள் ப்ரொஜெட்ரோன் என்ற ஹார்மோன் உற்பத்தியை அதிகரித்து, மாதவிடாயை தள்ளிப்போடும். இதுபோன்ற மாத்திரைகளை நீண்டகாலம் மருத்துவ பரிந்துரையின்றி, எவ்வித பிரச்னையும் இல்லாதவர்கள் உட்கொள்கையில், பிறப்புறுப்பில் முறையற்ற காலத்தில் ரத்தப்போக்கு (முறையற்ற மாதவிடாய் போல), வாந்தி, மயக்கம், அதிக மூட் ஸ்விங்க்ஸ் போன்றவை ஏற்படக்கூடும் என்பது மருத்துவர்களின் எச்சரிக்கை. இப்போதே பலருக்கும் இப்படியான பிரச்னைகளில் ஒருசில வரத்தொடங்கிவிட்டதாக அங்குள்ள ஊடகங்களில் கள ஆய்வு செய்து தெரிவித்துள்ளன.
காஸாவில் பல தாய்மார்களே தங்கள் மகளுக்கு இந்த மாத்திரைகளை பரிந்துரைக்கின்றனராம். இதிலும் பதின் பருவக் குழந்தைகளும், மெனோபாஸ் (மாதவிடாய் முடியும்) காலத்திலுள்ள பெண்கள் வயது தொடர்பான மாற்றங்களோடு சேர்த்து இதுமாதிரியான சிக்கல்களையும் எதிர்கொண்டு வருகின்றனர்.