"தவெகவை நோக்கிச் செல்வதில் தவறில்லை!" - துரை வைகோ பேச்சால் திமுக அதிர்ச்சி!
நடிகரும் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவருமான விஜய் தமிழக அரசியலில் ஒரு மிகப்பெரிய நேர்மறையான மாற்றத்தைக் கொண்டு வந்துள்ளதாகப் பாராட்டியுள்ள மதிமுக நாடாளுமன்ற எம்பி துரை வைகோ, "பொதுமக்கள் தவெக-வை நோக்கி ஈர்க்கப்பட்டு அக்கட்சியில் இணைவதில் எவ்விதத் தவறும் இல்லை" என்று பகிரங்கமாகத் தெரிவித்துள்ளார்.
செய்தியாளர்களைச் சந்தித்த துரை வைகோ, தமிழக அரசியலில் விஜய்யின் வருகை மற்றும் அவரது அரசியல் வெற்றியைப் பாராட்டிப் பேசியுள்ளார். "தமிழக அரசியலில் கடந்த காலங்களில் மறைந்த தேமுதிக தலைவர் விஜயகாந்த் போன்ற பெரும் ஆளுமைகளால் கூடக் கொண்டுவர முடியாத ஒரு மிகப்பெரிய அரசியல் மாற்றத்தை, தற்பொழுது தவெக தலைவர் விஜய் மிகக்குறுகிய காலத்தில் சாதித்துக் காட்டியுள்ளார்" என்று அவர் புகழாரம் சூட்டியுள்ளார்.

தற்போதைய சூழலில் சாதி, மதம், மற்றும் பண பலம் ஆகியவற்றிற்கு அப்பாற்பட்ட ஒரு தூய்மையான அரசியலை விஜய் முன்னெடுத்து அதில் தற்பொழுது வென்றுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். இனிவரும் காலங்களில் எந்தவொரு தேர்தலிலும் மற்றொரு கட்சியின் சின்னத்தில் (திமுகவின் உதயசூரியன் சின்னம்) மதிமுக போட்டியிடாது என்றும், தனிச் சின்னத்தில் மட்டுமே போட்டி என்பது குறித்துப் பொதுக்குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்படும் என்றும் இன்று காலையில் தான் துரை வைகோ அறிவித்திருந்தார்.

அந்த அதிரடி அறிவிப்பு வெளியான சில மணி நேரங்களிலேயே, ஆளுங்கட்சியான திமுகவிற்கு நிர்வாக ரீதியாகவும் அரசியல் ரீதியாகவும் பெரும் சவாலாக உருவெடுத்துள்ள தவெக-வையும் அதன் தலைவர் விஜய்யையும் துரை வைகோ இவ்வாறு பகிரங்கமாகப் பாராட்டியிருப்பது அரசியல் வட்டாரங்களில் மிக முக்கிய நகர்வாகப் பார்க்கப்படுகிறது.
