தேவர் ஜெயந்தி விழா: வாடகை வாகனங்களில் வரத் தடை... கலெக்டர் முக்கிய அறிவிப்பு!
பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரின் ஜெயந்தி மற்றும் குருபூஜை விழாவை முன்னிட்டு, பொதுமக்கள் கடைப்பிடிக்க வேண்டிய கட்டுப்பாடுகள் குறித்து மதுரை மாவட்ட கலெக்டர் நிஷாந்த் கிருஷ்ணா அறிவுறுத்தியுள்ளார். விழாவில் பங்கேற்க ராமநாதபுரம் மாவட்டத்துக்கு வாடகை வாகனங்களில் வருவதற்குத் தடை விதிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எந்தெந்த வாகனங்களில் செல்ல அனுமதி இல்லை?
அமலில் உள்ள 144 தடை உத்தரவின்படி, இருசக்கர வாகனங்கள், டிராக்டர்கள், ஆட்டோக்கள், சிறிய சரக்கு வாகனங்கள், திறந்தவெளி வாகனங்கள் மற்றும் சைக்கிள்கள் மூலம் விழாவுக்கு வர அனுமதி இல்லை. நடைபயணமாகச் செல்வதற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது. சொந்த நான்கு சக்கர வாகனங்களில் வருபவர்கள் முன் அனுமதி பெற வேண்டும். வாகனத்தின் பதிவுச் சான்றிதழ் (RC), ஓட்டுநர் உரிமம் உள்ளிட்ட ஆவணங்களின் நகல்களைச் சமர்ப்பிக்க வேண்டும். மேலும், உள்ளூர் காவல் நிலையத்தில் முன்கூட்டியே தகவல் தெரிவித்து, வழங்கப்படும் அனுமதிச் சீட்டை வாகனத்தின் முன்புறக் கண்ணாடியில் ஒட்டியிருக்க வேண்டும்.

கோஷங்கள், பேனர்கள் வைக்கவும் தடை
வாகனங்களில் ஒலிபெருக்கிகள் பொருத்துதல், கோஷங்கள் எழுப்புதல், ஆயுதங்கள் மற்றும் மதுபாட்டில்களைக் கொண்டு செல்லுதல், வாகனங்களின் கூரையில் பயணம் செய்தல் ஆகியவற்றுக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது. பட்டாசு வெடிப்பதையும், சுவர் விளம்பரங்கள் மற்றும் பிளக்ஸ் பேனர்கள் வைப்பதையும் தவிர்க்க வேண்டும். போக்குவரத்துக்கு இடையூறாக வாகனங்களை நிறுத்தக்கூடாது. விழாவில் பங்கேற்க வருபவர்கள் தங்கள் கிராமங்களிலிருந்து காலை 11 மணிக்குள் புறப்பட வேண்டும் என்றும், அனுமதிக்கப்பட்ட வழித்தடங்களிலேயே பயணிக்க வேண்டும் என்றும் கலெக்டர் அறிவுறுத்தியுள்ளார்.
