தேவர் ஜெயந்தி.. நாளை பசும்பொன் செல்கிறார் மு.க.ஸ்டாலின்!

 
தேவர்

நாளை நடைபெறவுள்ள பசும்பொன் முத்துராமலிங்க தேவர் ஜெயந்தி மற்றும் குருபூஜை விழாவையொட்டி, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் ராமநாதபுரம் மாவட்டம் பசும்பொன்னிற்கு சென்று நேரில் அஞ்சலி செலுத்தவுள்ளார்.

நாளை காலை மதுரை செல்லும் மு.க.ஸ்டாலின், கோரிப்பாளையத்தில் அமைந்துள்ள பசும்பொன் முத்துராமலிங்க தேவர் அவர்களின் உருவச்சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்துகிறார். அதனைத் தொடர்ந்து மதுரை தெப்பக்குளம் பகுதியில் அமைந்துள்ள சுதந்திரப் போராட்டத் தியாகிகளான மாவீரர் மருதுபாண்டியர்களின் உருவச்சிலைகளுக்கும் மலர் தூவி மரியாதை செலுத்துகிறார்.

தேவர்
மதுரையில் நிகழ்ச்சிகளை முடித்துக் கொண்டு நேராக ராமநாதபுரம் மாவட்டம் பசும்பொன் கிராமத்திற்குச் செல்லும் அவர், அங்குள்ள முத்துராமலிங்க தேவர் அவர்களின் நினைவிடத்தில் மலர் வளையம் வைத்து பொன்னடை போர்த்தி மரியாதை செலுத்துகிறார்.

தேவர் ஜெயந்தி

பசும்பொன் முத்துராமலிங்க தேவர் அவர்களின் குருபூஜை மற்றும் ஜெயந்தி விழாவை முன்னிட்டு தென் மாவட்டங்களில் பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டு வரும் நிலையில், பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும் பசும்பொன்னிற்கு வருகை தரவுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.