இவங்க எல்லாம் ஜெயிச்சு...?! “உயிரைக் கொடுத்து உழைத்த தொண்டரை உதாசீனப்படுத்திய வானதி?” - வைரலாகும் வீடியோ!

 
வானதி கடலை வானதி கடலை

தேர்தல் நேரத்தில் ஓட்டு கேட்பதற்காகத் தொண்டர்களைப் பயன்படுத்திக் கொண்டு, அவர்களுக்குச் சோதனை வரும்போது உதாசீனப்படுத்துவதாக பாஜக எம்.எல்.ஏ வானதி சீனிவாசன் மீது எழுந்துள்ள புகார் கோவையில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

கோவை கே.ஜி. மருத்துவமனை அருகே தள்ளுவண்டியில் நிலக்கடலை விற்பனை செய்து வருபவர் பாலன். பாஜக-வின் தீவிர விசுவாசியான இவர், கடந்த சட்டமன்றத் தேர்தலின் போது கோவை தெற்கு தொகுதியில் வானதி சீனிவாசனின் வெற்றிக்காகத் தெருத்தெருவாகச் சென்று வாக்கு சேகரித்தவர்.


தற்போது பாலனின் இரண்டு சிறுநீரகங்களும் செயலிழந்து, அவர் மிக மோசமான உடல் நிலையில் மருத்துவச் செலவுகளுக்குப் பணமின்றித் தவித்து வருகிறார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள உருக்கமான வீடியோவில் கூறியிருப்பதாவது:

"உதவி கேட்டுப் பலமுறை வானதி சீனிவாசனை நேரில் பார்த்தும், அவர் குறைந்தபட்சம் ஆறுதல் கூடச் சொல்லவில்லை. ஒவ்வொரு முறையும் 'பி.ஏ. வந்து உங்களைப் பார்ப்பார்' என்று கூறி என்னை அலைக்கழித்தார்." "எனது வீட்டின் அருகிலேயே பிரசாரத்திற்கு வந்தபோது கூட, நான் உடல்நலமின்றி இருப்பதை அறிந்தும் அவர் என்னை வந்து பார்க்கவில்லை" என பாலன் கண்ணீருடன் தெரிவித்துள்ளார்.

வானதி சீனிவாசன்

இந்த விவகாரத்தை முன்வைத்து கோவை அதிமுக வேட்பாளர் சிங்காநல்லூர் ஜெயராம் பாஜக-வை மிகக் கடுமையாகச் சாடியுள்ளார். இது தொடர்பாக அவர் தனது எக்ஸ் தளத்தில், “சொந்தக் கட்சித் தொண்டனுக்கே சிறு உதவி கூடச் செய்யாத இவர்கள், தொகுதி மக்களுக்கும் நாட்டு மக்களுக்கும் என்ன செய்துவிடப் போகிறார்கள்? உண்மையான உழைப்பாளர் ஒருவர் இப்படி நடுத்தெருவில் கைவிடப்பட்டிருப்பது வேதனையளிக்கிறது” எனப் பதிவிட்டுள்ளார்.

வாக்கு சேகரிக்கச் செல்லும் இடங்களில் எல்லாம் "நாங்கள் தொண்டர்களின் கட்சி" எனப் பேசும் பாஜக-வின் பிம்பத்திற்கு, பாலனின் இந்தக் குமுறல் பெரும் பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது. சொந்தக் கட்சி நிர்வாகிகளே இந்த விவகாரத்தால் அதிருப்தியில் இருப்பதாகக் கூறப்படுகிறது.