"தவெகவிலிருந்து தான் எங்களை அணுகினாங்க!" - எம்.ஆர்.விஜயபாஸ்கர் பரபரப்புப் பேட்டி!

 
எம்.ஆர்.விஜயபாஸ்கர்

"நாங்கள் தேடிப்போகவில்லை, தமிழக வெற்றிக் கழகத் தரப்பிலிருந்துதான் எங்களை முதலில் அணுகினார்கள்" என்று அதிமுகவிலிருந்து அண்மையில் விலகி முதலமைச்சரின் முன்னிலையில் தவெக-வில் இணைந்த கரூரின் முக்கியப் புள்ளியும், முன்னாள் அமைச்சருமான எம்.ஆர்.விஜயபாஸ்கர் வாக்குமூலத்தை அளித்துள்ளார்.

அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், "தீர்ந்து போன சக்தியிடமிருந்து குதிரை பேரம் பேசி ஆள் பிடிக்கிறார்கள்" என்று முதலமைச்சர் விஜய் மீது குற்றம் சாட்டியிருந்த நிலையில், அதற்கு முற்றிலும் முரணான ஒரு விளக்கத்தை எம்.ஆர்.விஜயபாஸ்கர் செய்தியாளர்கள் சந்திப்பில் வெளிப்படுத்தியுள்ளார். 

“இபிஎஸ் விஜயபாஸ்கர் எஸ்.பி.வேலுமணி எடப்பாடி

செய்தியாளர்களிடம் பேசிய எம்.ஆர்.விஜயபாஸ்கர், "சுமார் 40 ஆண்டு காலம் அதிமுகவில் விசுவாசமாகப் பணியாற்றி, அமைச்சராகவும் பொறுப்பு வகித்தோம். ஆனால், தற்போதைய அரசியல் சூழல் காரணமாகக் கட்சியிலிருந்து விலக வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது" என்று குறிப்பிட்டுள்ளார். தொடர்ந்து பேசிய அவர், "நாங்களாக விருப்பப்பட்டுச் செல்லவில்லை. தவெக தலைமை மற்றும் அதன் முக்கியத் தரப்பிலிருந்துதான் எங்களை முறைப்படி அணுகி பேசினார்கள்" என்று ஓப்பனாக ஒப்புக் கொண்டுள்ளார்.

ஒரு மிகப்பெரிய கட்சியில் இருந்து விலகிப் புதிய கட்சியில் இணைவது சாதாரண முடிவல்ல என்று கூறிய அவர், இதற்காகத் தனது ஆதரவாளர்களிடம் விரிவான ஆலோசனைகளை நடத்தியதாகக் கூறியுள்ளார்.

விஜயபாஸ்கர்

"நாங்கள் தவெக-வில் இணைவது குறித்துத் தொகுதி முழுவதும் உள்ள எங்களுடைய 95 சதவீத தொண்டர்களிடம் கருத்து கேட்டோம். அவர்கள் அனைவரும் தவெக-விற்குச் செல்ல முழுச் சம்மதம் தெரிவித்ததன் அடிப்படையிலேயே, தமிழகத்தின் மாற்றத்திற்கான அரசியலை நோக்கி இந்த முடிவை எடுத்தோம்" என எம்.ஆர்.விஜயபாஸ்கர் பரபரப்பாகத் தெரிவித்துள்ளார்.

முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கரின் இந்த வெளிப்படையான பேட்டி, தவெக திட்டமிட்டு அதிமுக நிர்வாகிகளை இழுப்பதாக ஜெயக்குமார் வைத்த குற்றச்சாட்டை உறுதிப்படுத்தும் விதமாக அமைந்துவிட்டதால், அதிமுக மற்றும் தவெக தொண்டர்களிடையே வார்த்தைப் போர் முற்றியுள்ளது.