“தேன்கூட்டை அழிக்கப் பார்க்குறாங்க... சினிமா மயக்கமா.. உழைப்பா?” - தொண்டர்களுக்கு திருமா உருக்கமான கேள்வி!
கடலூர் மாவட்டம் புவனகிரி தொகுதி திமுக வேட்பாளர் துரை கி. சரவணனை ஆதரித்துச் சேத்தியாதோப்பு பகுதியில் நடைபெற்ற தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில், விசிக தலைவர் திருமாவளவன் பங்கேற்று உரையாற்றினார். அப்போது, தமிழக வெற்றிக் கழகம் (தவெக) குறித்து அவர் முன்வைத்த விமர்சனங்கள் அனல் பறந்தன.
பிரச்சாரத்தின் போது பேசிய திருமாவளவன், “திமுகவை ஆட்சியில் இருந்து அகற்றுவதற்காக விஜய் கட்சி தொடங்கியுள்ளார். அது அவரது நோக்கமாக இருக்கலாம். ஆனால், திமுகவை வீழ்த்திவிட்டு அந்த இடத்தில் அவர் யாரை அமர்த்தப் பார்க்கிறார் என்பதை விசிலடிக்கும் தவெக தொண்டர்களிடம் தான் கேட்க வேண்டும்” எனக் கூறினார். மேலும், விஜய் பாஜக-வுக்குச் சாதகமாகச் செயல்படுவதாகவும் அவர் குற்றம் சாட்டினார்.

விசிக-வின் வாக்குகள் தவெக-விற்குச் செல்லும் என்ற கணிப்புகளை மறுத்த அவர், தனது தொண்டர்களைப் பார்த்து மிகவும் உருக்கமாகப் பேசினார். “உங்களுக்குச் சினிமா மோகமா? கதாநாயகன் மயக்கமா? உங்களுக்கு ஒரு துக்கம் என்றால் அவர் வீதியில் இறங்கிப் போராடுவாரா? உங்கள் கண்ணீரைத் துடைப்பாரா?” எனக் கேள்வி எழுப்பினார்.
“இயக்கத்திற்காக நான் எனது இளமையைத் தொலைத்துள்ளேன். எத்தனை பட்டங்கள் வந்தாலும் எனது இளமை திரும்பி வருமா? ஒடுக்கப்பட்ட மக்களை அரசியல் சக்தியாக மாற்ற நான் சிந்திய உழைப்பு சாதாரணமானது அல்ல.”

தவெக-வின் வருகையைத் தேன்கூடு அழிப்புடன் ஒப்பிட்டு அவர் எச்சரித்தார். “தேன்கூட்டை அழிப்பதைப் போல விசிக-வை அழிக்கப் பார்க்கிறார்கள். தேனீக்களின் உழைப்பையும், அந்தத் தேன்கூட்டை அழிப்பவர்களின் நிலைமையையும் அவர்கள் எண்ணிப் பார்க்க வேண்டும்.”
இவ்வாறு தவெக-வை மறைமுகமாகச் சாடிய அவர், அதிமுக மற்றும் பாமக-விற்கு வாக்களிப்பது பாஜக-விற்கு வாக்களிப்பதற்குச் சமம் என்றும், தமிழகத்தில் பாஜக-விற்கு ‘இரட்டைச் சின்னம்’ (இரட்டை இலை மற்றும் மாம்பழம்) இருப்பதாகவும் விமர்சித்தார்.
