"ஊழல் செய்வதற்குப் பதிலாக பிச்சை எடுத்திருக்கலாம்" - அரசு அதிகாரிகளுக்கு மதுரை உயர்நீதிமன்றம் கடும் கண்டனம்!
ஆதிதிராவிடர் மாணவர்களுக்கான அரசு உதவித்தொகையைக் கையாடல் செய்த வழக்கில், ஊழலில் ஈடுபடும் அதிகாரிகளைக் கண்டித்து மதுரை உயர் நீதிமன்றம் கடுமையான கருத்துகளைத் தெரிவித்துள்ளது.
சிவகங்கை மாவட்டம், பாதரக்குடியைச் சேர்ந்த சக்திவேல் என்பவர் மதுரை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில், சிவகங்கையில் ஆதிதிராவிடர் மாணவர் விடுதி மாணவர்களுக்கு வழங்கப்பட வேண்டிய ரூ.2 கோடியே 35 லட்சம் நிதியை அதிகாரிகளும் பணியாளர்களும் கையாடல் செய்துள்ளதாகவும், இந்த வழக்கை சி.பி.சி.ஐ.டி. விசாரணைக்கு மாற்ற வேண்டும் என்றும் கோரியிருந்தார்.

நீதிபதிகள் வேல்முருகன் மற்றும் கே.கே.ராமகிருஷ்ணன் அமர்வு முன்பு இவ்வழக்கு விசாரணைக்கு வந்தது. அரசுத் தரப்பில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுவிட்டதாகத் தெரிவிக்கப்பட்டது. இதைக் கேட்ட நீதிபதிகள், இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு பதிவான வழக்கில் இப்போது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்வதை ஏற்க முடியாது என்றனர். மேலும், "ஆதிதிராவிடர் மாணவர்களுக்கான உதவித்தொகையை முறைகேடு செய்துள்ளார்கள். அவ்வாறு ஊழல் செய்வதற்குப் பதிலாகப் பிச்சை எடுத்துப் பிழைத்திருக்கலாம். அதிகாரிகளில் பெரும்பாலானவர்கள் ஊழல்வாதிகள் தான்" என்று காட்டமாகத் தெரிவித்தனர்.
தமிழகத்தில் உள்ள அனைத்து அரசுத் துறைகளிலும் ஊழல் செய்த அதிகாரிகள் எத்தனை பேர்? அவர்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை என்ன? என்பது குறித்து விரிவான பதில் மனு தாக்கல் செய்ய தமிழக அரசுக்கு உத்தரவிட்ட நீதிபதிகள், வழக்கினை 4 வாரங்களுக்கு ஒத்திவைத்துள்ளனர்.
