“பேசாதவனை தூக்கி வைக்கிறார்கள், பேசுபவனை தூக்கி எறிகிறார்கள்” - சீமான்
நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், மறைமலைநகரில் நடைபெற்ற அக்கட்சியின் பொதுக்கூட்ட நிகழ்ச்சியில் கலந்துகொண்டு தொண்டர்கள் மத்தியில் எழுச்சியுரை ஆற்றினார். அப்போது பேசிய அவர், தற்போதைய அரசியல் சூழலில் உண்மைகளைப் பேசுபவர்களை மக்கள் தூக்கி எறிவதாகவும், எதற்கும் உதவாமல் மௌனமாக இருப்பவர்களைத் தலையில் தூக்கி வைத்துக் கொண்டாடுவதாகவும் தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தினார்.

மேலும் அதிகாரம் என்பது மிகவும் வலிமையானது என்றாலும், அது யாருக்கும் எப்போதுமே நிலையானது அல்ல என்பதைப் புரிந்துகொள்ள வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டார். எளிதாகக் கிடைக்கும் எந்தவொரு பொருளுக்கும் இந்த உலகத்தில் மதிப்பு இருக்காது என்று சுட்டிக்காட்டிய அவர், ஒரு மனிதன் ஏழு அடி நீளம் தாண்டுவதற்கு எழுபது அடி பின்னால் செல்ல வேண்டியுள்ளது என்றும், அதுபோலவே நமது தற்போதைய பின்னடைவும் என்று பேசினார்.
வரும் நாடாளுமன்றத் தேர்தலில் நாம் தமிழர் கட்சி எவ்விதக் கூட்டணியும் இன்றி தனித்துப் போட்டியிட்டு நாற்பது தொகுதிகளிலும் பிரம்மாண்ட வெற்றி பெறும் என்றும், மக்கள் தங்களைத் தேடி வரும் காலம் வெகுதொலைவில் இல்லை என்றும் கூறினார். தங்களுக்குத் தோல்வி என்பதே கிடையாது என்றும், தங்களது அரசியல் எல்லை வெற்றி மட்டும்தான் என்றும் தொண்டர்களை உற்சாகப்படுத்தினார்.

கடந்த தேர்தல்களில் தன்னைத் தோற்கடித்துச் சட்டமன்றத்திற்குள் வரவிடாமல் செய்ததன் மூலம் மற்ற அரசியல் கட்சியினர் தப்பித்துக் கொண்டதாக நகைச்சுவையாகக் குறிப்பிட்ட அவர், தான் மட்டும் உள்ளே சென்றிருந்தால் மற்றவர்கள் அனைவரும் வெளியேதான் இருந்திருக்க வேண்டும் என்றார். மக்கள் என் மீது பாவம் பார்த்தார்களா அல்லது உங்களைக் காப்பாற்ற நினைத்தார்களா என்று தெரியவில்லை எனக் கூறிய அவர், முதலமைச்சர் ஆன பிறகுதான் அவருக்குக் கடன் இருப்பதே தெரிகிறது என்று விமர்சித்தார். இறுதியாக, தேர்தலின் போது அறிவிக்கப்பட்ட அந்த ஆறு சிலிண்டர்களை மக்களுக்கு எப்படித் தரப்போகிறார்கள் என்பதைத் தான் கூர்ந்து கவனிப்பதாகக் கூறி தனது பேச்சை நிறைவு செய்தார்.
