“அழிப்போம்னு சொன்னாங்க.. ஆனா இப்போ உயிருக்குப் போராடுறாங்க!” - ஈரானை வறுத்தெடுத்த நெதன்யாகு!

 
நெதன்யாகு நெதன்யாகு

அமெரிக்கா மற்றும் ஈரான் இடையே பாகிஸ்தானில் நடைபெற்ற அமைதிப் பேச்சுவார்த்தை எவ்வித முடிவும் எட்டப்படாமல் தோல்வியில் முடிந்துள்ள நிலையில், இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு ஈரானுக்கு எதிராகக் கடுமையான எச்சரிக்கையை விடுத்துள்ளார்.

செய்தியாளர்களிடம் பேசிய நெதன்யாகு, இஸ்ரேலைச் சுற்றி ஈரான் பின்னியுள்ள சதிவலைகளைப் பட்டியலிட்டார். "காசாவில் ஹமாஸ், லெபனானில் ஹிஸ்புல்லா, ஏமனில் ஹவுதிகள் மற்றும் ஈராக்கில் உள்ள போராளிக் குழுக்களைப் பயன்படுத்தி இஸ்ரேலின் கழுத்தை நெரிக்க ஈரான் முயற்சி செய்தது. ஆனால், இன்று காலம் மாறிவிட்டது. இப்போது நாம் அவர்களின் கழுத்தை நெரித்துக் கொண்டிருக்கிறோம். இஸ்ரேலை அழிப்போம் என்று அச்சுறுத்திய ஈரான், இப்போது தான் தப்பிப் பிழைக்கப் போராடிக் கொண்டிருக்கிறது."

நெதன்யாகு

ஈரானின் ராணுவ பலத்தைச் சிதைப்பதில் இஸ்ரேல் வெற்றி கண்டுள்ளதாக அவர் பெருமிதத்துடன் குறிப்பிட்ட அவர், ஈரானின் அணு ஆயுதத் திட்டங்கள் மற்றும் பாலிஸ்டிக் ஏவுகணைத் திட்டங்களை நசுக்குவதில் இஸ்ரேலியப் படைகள் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றுள்ளன. ஈரானுக்கு எதிரான எங்களது நடவடிக்கைகள் இன்னும் முடிவடையவில்லை. இலக்கை அடையும் வரை இஸ்ரேல் ஓயாது என தெரிவித்தார்.

நெதன்யாகு

பாகிஸ்தானில் அமெரிக்கா மற்றும் ஈரான் பிரதிநிதிகள் சந்தித்துப் பேசியது உலக நாடுகளிடையே அமைதி திரும்பும் என்ற எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது. ஆனால், இரு தரப்பும் பிடிவாதம் காட்டியதால் பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்தது. இதன் விளைவாக, மத்திய கிழக்கில் மீண்டும் போர் மேகங்கள் சூழத் தொடங்கியுள்ளன.