"எங்களை வெனிசுவேலா ஆக்கப் பார்த்தார்கள்!" - அமெரிக்காவின் சதித்திட்டம் தோல்வி - ஈரான் சபாநாயகர்!
சர்வதேச அரங்கில் அமெரிக்காவுக்கும் ஈரானுக்கும் இடையிலான மோதல் உச்சக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், அமெரிக்காவின் அனைத்து ராணுவ மற்றும் அரசியல் இலக்குகளும் தவிடு பொடியாகிவிட்டதாக ஈரான் பகிரங்கமாகக் குற்றம் சாட்டியுள்ளது.
ஈரான் பாராளுமன்ற சபாநாயகர் முகமது பாகர் காலிபாப் இன்று ஆற்றிய உரையில், அமெரிக்கா அடைய நினைத்துத் தோற்றுப்போன 4 முக்கிய இலக்குகளைப் பட்டியலிட்டுள்ளார்.

ஈரானின் விமானப்படை மற்றும் ஏவுகணைத் திறனை பலவீனப்படுத்துதல். ஈரானியக் கடற்படையை முழுமையாக அழித்தல். ஈரானுக்கு எதிராகத் தரைவழித் தாக்குதலைத் தொடங்குதல். ஹோர்முஸ் ஜலசந்தியை ஈரானின் கட்டுப்பாட்டில் இருந்து விடுவித்துத் திறத்தல்.
ஈரானின் ஆட்சி மாற்றத்தைக் கொண்டுவர அமெரிக்கா முயன்றதாகக் குறிப்பிட்ட சபாநாயகர், "எங்கள் நாட்டு எண்ணெய் வளங்களைக் கைப்பற்றவும், ஈரானை 'வெனிசுவேலா' போன்ற நிலைக்குத் (பொருளாதாரச் சீரழிவு மற்றும் அரசியல் குழப்பம்) தள்ளவும் எதிரிகள் முயன்றனர். ஆனால், அவர்களின் அந்த முயற்சி படுதோல்வி அடைந்துவிட்டது" எனத் தெரிவித்துள்ளார்.

அமெரிக்கா விதித்த காலக்கெடுவும், விடுத்த எச்சரிக்கைகளும் பலன் தராததால், இப்போது வாஷிங்டன் நிர்வாகம் நேரடியாகப் பேச முடியாமல் இடைத்தரகர்கள் (Mediators) மூலமாக ஈரானுக்கு ரகசியச் செய்திகளை அனுப்பத் தொடங்கியுள்ளதாகவும் அவர் கிண்டலாகக் குறிப்பிட்டுள்ளார்.
ஏற்கனவே ஹோர்முஸ் ஜலசந்தியை ஈரான் மீண்டும் மூடியுள்ளதாலும், இந்தியக் கப்பல்கள் மீது தவறுதலாகத் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதாலும் அந்தப் பிராந்தியத்தில் போர் மேகங்கள் சூழ்ந்துள்ளன. இந்நிலையில், ஈரானின் இந்த அதிரடி விமர்சனம் உலக நாடுகளின் கவனத்தை ஈர்த்துள்ளது.
