திருடப்போன இடத்தில் மாட்டிக் கொண்ட கால்கள்... கதவில் தலைகீழாகத் தொங்கிய திருடன்... வைரல் வீடியோ!

 
கதவு கதவு


உத்தரப் பிரதேச மாநிலம் காஸியாபாத்தில் உள்ள ஒரு வீட்டில் திருடுவதற்காக நள்ளிரவில் புகுந்த மர்ம நபர் ஒருவர், எதிர்பாராத விதமாகப் பொதுமக்களிடம் வசமாகச் சிக்கியுள்ளார். வீட்டின் உள்ளே புகுந்த திருடனைப் பார்த்த உரிமையாளர்கள் சத்தம் போடவே, உறக்கத்திலிருந்த அக்கம் பக்கத்தினர் உடனடியாகத் திரண்டு வீட்டைச் சூழ்ந்து கொண்டனர். இதைப் பார்த்த திருடன் பயந்துபோய், உயிரைக் காப்பாற்றிக் கொள்ள அந்த வீட்டின் பிரதான கதவைத் தாண்டி குதித்துத் தப்பிக்க மின்னல் வேகத்தில் முயன்றார். ஆனால், அப்போது அந்த கதவில் இருந்த கூர்மையான இரும்பு கம்பிகள், அந்த திருடனின் கால்களைப் பலமாகப் பிடித்துக் கொண்டதால் அவரால் அங்கிருந்து நகர முடியாமல் போனது.

தப்பிக்க நினைத்த திருடன் கம்பிகளுக்கு இடையே கால்கள் சிக்கியதால், சுமார் அரை மணி நேரத்திற்கும் மேலாகத் தலைகீழாகத் தொங்கும் நிலை ஏற்பட்டது. கீழே விழவும் முடியாமல், கம்பியில் இருந்து காலை எடுக்கவும் முடியாமல் அந்த நபர் வலியில் ஓலமிட்டு அலறவே, அங்கிருந்த பொதுமக்கள் அவரைப் பிடித்துக் கொண்டு போலீஸாருக்குத் தகவல் கொடுத்தனர். திருடச் சென்ற இடத்தில் திருடனே கதவில் சிக்கிக்கொண்ட இந்தச் சம்பவம் அந்தப் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியதோடு, அங்குத் திரண்டிருந்தவர்கள் திருடனின் நிலைமையைப் பார்த்துச் சிரிப்பதா அல்லது பரிதாபப்படுவதா என்று தெரியாமல் திகைத்தனர். விரைந்து வந்த போலீசார், கம்பியில் சிக்கியிருந்த திருடனை மீட்டுச் சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர்.

இந்த விசித்திரமான திருட்டு முயற்சி தொடர்பான புகைப்படங்கள் மற்றும் காணொளிகள் தற்போது சமூக வலைத்தளங்களில் காட்டுத்தீயாகப் பரவி வருகின்றன. "பாவம் செய்தவர் பட்டே தீர வேண்டும்" என்று இணையவாசிகள் இதைக் கிண்டல் செய்து வரும் வேளையில், இந்தச் சம்பவம் திருடர்களுக்கு ஒரு பாடமாக அமையும் என்று போலீசார் தெரிவித்துள்ளனர். காஸியாபாத் பகுதியில் சமீபகாலமாகத் திருட்டுச் சம்பவங்கள் அதிகரித்து வரும் நிலையில், இந்தத் திருடன் சிக்கிய விதம் போலீசாரின் வேலையைச் சுலபமாக்கி உள்ளது. சிகிச்சைக்குப் பிறகு அந்த நபரிடம் இருந்து வேறு எந்தெந்த இடங்களில் திருடினார் என்பது குறித்துத் தீவிர விசாரணை நடத்தப் போவதாகக் காவல்துறையினர் அறிவித்துள்ளனர்.