புதுசு புதுசா யோசிக்கறாய்ங்க... செல்லப்பிராணி பிரியர்களிடையே ட்ரெண்டாகும் 'நிலா கேக்குகள்'!
சீனாவில் கொண்டாடப்படும் பாரம்பரிய இலையுதிர் காலத் திருவிழாவின் போது மனிதர்கள் விரும்பி உண்ணும் 'நிலா கேக்குகள்' தற்போது மனிதர்களுக்கு மட்டுமின்றி செல்லப்பிராணிகளுக்கும் பிரத்யேகமாகத் தயாரிக்கப்பட்டு அங்குள்ள வளர்ப்பு பிராணிகள் உரிமையாளர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. விலங்குப் பிரியர்கள் மத்தியில் புதிய ட்ரெண்டாக மாறியுள்ள இந்த நிலா கேக்குகள் குறித்த சுவாரஸ்யமான தகவல்கள் வெளியாகியுள்ளன.
சீனாவின் மிக முக்கிய பாரம்பரியப் பண்டிகைகளில் ஒன்றான மத்திய-இலையுதிர் காலத் திருவிழா கோலாகலமாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. இக்காலக்கட்டத்தில் குடும்பத்தினரும் நண்பர்களும் ஒன்று கூடி, நிலா கேக்குகள் எனப்படும் பிரத்யேக பாரம்பரிய இனிப்புப் பலகாரங்களைப் பரிமாறிக்கொண்டு மகிழ்வது சீனர்களின் நீண்டகால வழக்கமாகும்.
ஆனால், தற்காலத்தில் தங்களது செல்லப்பிராணிகளையும் குடும்பத்தின் ஒரு அங்கமாகக் கருதும் பழக்கம் அதிகரித்து வருவதால், மனிதர்கள் உண்ணும் பண்டங்களை விலங்குகளுக்கும் வழங்கி மகிழும் புதிய கலாச்சாரம் உருவாகியுள்ளது. இதன் ஒரு பகுதியாகவே, நாய்கள் மற்றும் பூனைகள் உள்ளிட்ட செல்லப்பிராணிகளுக்காகப் பிரத்யேகமாகத் தயாரிக்கப்பட்ட 'நிலா கேக்குகள்' தற்போது சீனச் சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன.
மனிதர்கள் சாப்பிடும் சாதாரண நிலா கேக்குகளில் அதிகளவு சர்க்கரை, மைதா மற்றும் எண்ணெய் கலந்திருப்பதால், அவை செல்லப்பிராணிகளின் செரிமான மண்டலத்தைப் பாதிப்பதுடன் உடல் நலத்திற்கும் கேடு விளைவிக்கும். இதனைத் தவிர்க்கும் வகையில், பிராணிகளுக்கான பிரத்யேக நிலா கேக்குகளில் சர்க்கரை அல்லது உப்பு போன்ற எந்தவிதச் செயற்கைப் பொருட்களும் சேர்க்கப்படுவதில்லை.
இவை முற்றிலும் எளிதில் ஜீரணிக்கக்கூடிய வகையிலும், ஊட்டச்சத்துக்கள் நிறைந்ததாகவும் தயாரிக்கப்படுகின்றன. குறிப்பாக, கோழி இறைச்சி, வாத்து இறைச்சி, சால்மன் மீன் மற்றும் பூசணிக்காய் போன்ற ஆரோக்கியமான பொருட்களைக் கொண்டு, நாய்களின் உடல் நலனுக்குப் பொருத்தமான தீவன வடிவத்தில் இந்த நிலா கேக்குகள் வடிவமைக்கப்படுகின்றன.
சீனாவில் உள்ள முன்னணி ஆன்லைன் வர்த்தகத் தளங்கள் மற்றும் செல்லப்பிராணிகளுக்கான பிரத்யேகப் பேக்கரடிகளில் இந்த நிலா கேக்குகள் தற்போது விறுவிறுப்பாக விற்பனை செய்யப்பட்டு வருகின்றன. நான்கு கேக்குகள் அடங்கிய ஒரு சிறிய பெட்டியானது, அதன் தரம் மற்றும் பிராண்டிற்கு ஏற்ப 10 முதல் 50 யுவான் வரை (இந்திய மதிப்பில் தோராயமாக ரூ.120 முதல் ரூ.600 வரை) விற்பனை செய்யப்படுகிறது.
சீனாவில் செல்லப்பிராணிகளை வளர்ப்பவர்களின் எண்ணிக்கை ஆண்டுதோறும் பெருமளவு அதிகரித்து வரும் சூழலில், பிராணிகளுக்கான இத்தகைய புதிய உணவு வகைகளின் தயாரிப்பும் வர்த்தகமும் அங்கு மிகப்பெரும் பொருளாதார வாய்ப்பாக மாறியுள்ளது குறிப்பிடத்தக்கது.
