குண்டுவெடிப்பு வழக்கில் திரிணாமுல் முன்னாள் எம்எல்ஏ சவ்கத் மொல்லா கைது!

 
west bengal west bengal

மேற்குவங்க மாநிலம் பான்கர் பகுதியில் நடைபெற்ற குண்டுவெடிப்பு வழக்கில் தேடப்பட்டு வந்த திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் எம்எல்ஏ சவ்கத் மொல்லாவை தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் கைது செய்துள்ளனர். தெற்கு 24 பர்கானாஸ் மாவட்டத்தில் சட்டவிரோதமாக நாட்டு வெடிகுண்டு தயாரித்தபோது ஏற்பட்ட விபத்தில் ஒருவர் உயிரிழந்தார் மற்றும் 3 பேர் படுகாயமடைந்தனர். இந்த பயங்கர விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்து அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தி வந்தனர்.

இந்த விபத்து தொடர்பாக தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் சவ்கத் மொல்லாவின் வீடு மற்றும் அவருக்குத் தொடர்புடைய பல இடங்களில் அதிரடிச் சோதனைகளை மேற்கொண்டனர். இந்த சோதனைகளின் முடிவில் குண்டுவெடிப்பு சம்பவத்தில் சவ்கத் மொல்லாவுக்கு உள்ள தொடர்பு உறுதி செய்யப்பட்டதால் அவரை அதிகாரிகள் முறைப்படி கைது செய்துள்ளனர். மேலும், இந்த குண்டு தயாரிப்பில் ஈடுபட்டவர்களை வாகனத்தில் அழைத்துச் சென்ற கார் ஓட்டுநர் ஏற்கனவே கைது செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

வழக்கில் தொடர்புடைய முக்கிய நபர்கள் கண்டறியப்பட்டு வரும் நிலையில், முன்னாள் மக்கள் பிரதிநிதி ஒருவரே குண்டுவெடிப்பு வழக்கில் சிக்கி கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த சட்டவிரோத வெடிகுண்டு தயாரிப்புக்கு பின்னணியில் இருக்கும் மற்ற நபர்கள் மற்றும் இதற்கான நிதி ஆதாரங்கள் குறித்தும் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் தொடர்ந்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.