திருக்கார்த்திகை மகாதீபம்... 27 விளக்குகள் வீட்டில் எந்தெந்த இடங்களில் ஏற்ற வேண்டும்? என்னென்ன பலன்கள்!
கார்த்திகை மாதத்தில் ஏற்றி வழிபடுகிற ஒவ்வொரு தீபத்திலும் சக்தி ஒளியாகி வந்து இறங்கி நம் இல்லங்களில் குடியேறி நம்மை ஆசீர்வதிக்கிறாள் என்பது ஐதீகம்.கார்த்திகை மாதம் முழுவதும் சிலர் வீட்டு வாசலில் விளக்கேற்றுவர். பௌர்ணமி நாளில் வீடுகளிலும் வாசலிலும் வரிசையாக விளக்கேற்றி வழிபாடு செய்வர். திருவண்ணாமலையில் மலை உச்சியில் ஏற்றப்படும் தீபம் சுற்றுவட்டாரத்தில் அமைந்துள்ள 10 கிமீ வரை இதன் ஒளியை காணலாம்.
சாதாரண நாட்களிலேயே வீட்டின் தலை வாசல்படிகளில் சூரியோதயத்தின் போதும், சூரிய அஸ்தமனத்தின் போதும் விளக்கேற்றி வழிபாடு செய்வது மிகுந்த பலன்களை கொடுக்கும். நம்மைச் சுற்றியும், நமது இல்லத்திலும் நல்ல அதிர்வுகளையும் தரும். தேவதைகளும், அஷ்டதிக் பாலகர்களும் நம்மைக் காப்பார்கள். அதிலும் இன்று கார்த்திகை தீபத்தின் போது, திருவண்ணாமலையில் மகாதீபமேற்றப்படும் அதே வேளையில் உங்கள் இல்லங்களிலும் தீபமேற்றி வழிபாடு செய்யலாம். எத்தனை தீபங்கள் ஏற்றி வழிபடுகிறோமோ, அதற்குரிய பலன்களும், புண்ணியங்களும் கிட்டும். வீடுகளில் எத்தனை தீபமேற்றி வழிபாடு செய்தால் நல்லது என்பது பலரும் குழப்பத்தில் இருந்து வருகின்றனர்.

வீட்டின் தலைவாசலில் 2 விளக்குகளும், பூஜை அறையில் 5 விளக்குகளும் ஏற்ற வேண்டும். இந்த 5 விளக்குகளையும் வட்டமாக எல்லா திசைகளிலும் வெளிச்சம் படும்படி ஏற்ற வேண்டும். வீட்டில் உள்ள அனைத்து அறைகளிலும் தீபம் ஏற்றுவது நல்லது. குறிப்பாக சமையலறையிலும் விளக்கேற்ற வேண்டியதும் அவசியம்.
ஜோதிட சாஸ்திரப்படி உள்ள 27 நட்சத்திரங்களையும் குறிக்கும் வகையில், வீட்டில் 27 அகல் விளக்குகள் ஏற்றப்படுவதாகப் பாரம்பரிய நம்பிக்கை நிலவுகிறது. ஒவ்வொரு விளக்கும் ஒவ்வொரு நட்சத்திரத்தின் ஒளியாகக் கருதப்படுவதால், இல்லத்தில் நேர்மறை ஆற்றல் பரவி ஐஸ்வர்யம் உண்டாகும் என்பது ஐதீகம்.
குளிர் மிகுந்த கார்த்திகை முழுமதி நாளில் நெய், நல்லெண்ணெய் அல்லது விளக்கெண்ணெயால் தீபமேற்றி வழிபடுவதும், சிவாலயங்களில் உள்ள தீபங்களை வணங்குவதும் அனைத்துத் தர்மங்களையும் செய்த பலனையும், புண்ணிய நதிகளில் நீராடிய பலனையும் தரும் என ஆன்மிக நூல்கள் குறிப்பிடுகின்றன.

இல்லத்தில் லட்சுமி கடாட்சம் நிறைந்து எதிர்மறை சக்திகள் விலக, பாரம்பரிய இல்லங்களில் பின்வரும் இடங்களில் தீபங்கள் ஏற்றப்படுவது வழக்கமாக உள்ளது. கோலமிடப்பட்ட வாசலில்: 5 விளக்குகள், திண்ணைகளில்: 4 விளக்குகள், மாடக்குழிகளில்: 2 விளக்குகள், நிலைப்படியில்: 2 விளக்குகள், நடைகளில்: 2 விளக்குகள், முற்றத்தில்: 4 விளக்குகள், பூஜையறையில் சர்வமங்கலங்களும் உண்டாக 2 கார்த்திகை விளக்குகள், சமையல் அறையில்: அன்ன தோஷம் நீங்க 1 விளக்கு, தோட்டம் முதலான வெளிப்பகுதிகளில்: மரண பயம் நீங்கி ஆயுள் விருத்தி அடைய யம தீபம், பின்கட்டு பகுதியில் விஷ ஜந்துக்கள் அணுகாதிருக்க 4 விளக்குகள் என ஏற்ற வேண்டும்.
தற்காலத்தில் அடுக்குமாடி குடியிருப்புகள் மற்றும் மாடி வீடுகளில் வசிப்பவர்கள், தங்கள் இடவசதிக்கு ஏற்ப வீட்டுக்குள்ளேயும் வெளியிலுமாக வசதியான இடங்களில் 27 விளக்குகளை ஏற்றி வழிபடலாம்.
தீபங்களை ஏற்றி வைத்த பின்னர், “தீப சரஸ்வதி போற்றி, தீப லட்சுமி போற்றி, தீப துர்கா போற்றி” என ஒவ்வொரு நாமத்தையும் மும்முறை சொல்லி வழிபட வேண்டும். தொடர்ந்து குலதெய்வத்தின் திருநாமத்தையும் மூன்று முறை உச்சரித்து, தீபத்தை 12 முறை நமஸ்காரம் செய்வது வீட்டில் சுபிட்சத்தைக் கூட்டும்.
