தவெக ஆட்சி 5 ஆண்டுகள் தொடர விசிக துணை நிற்கும் ... திருமா அதிரடி!
தமிழக அரசியல் களம் பல்வேறு திருப்பங்களை நோக்கி நகர்ந்து வரும் வேளையில், மதுரையில் செய்தியாளர்களைச் சந்தித்த விடுதலைச் சிறுத்தைகள் கட்சி (விசிக) தலைவர் தொல்.திருமாவளவன் தற்போதைய அரசியல் நிலவரங்கள் குறித்து அதிரடியான கருத்துக்களைப் பகிர்ந்துள்ளார். தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) ஆட்சி குறித்து எழுப்பப்பட்ட கேள்விக்கு, தவெக அரசுக்கு எவ்வித ஆபத்தும் இல்லை என்றும், அது முழுமையாக ஐந்து ஆண்டுகள் நீடிக்கும் என்றும் அவர் திட்டவட்டமாகத் தெரிவித்தார்.

தவெக ஆட்சி கவிழ வாய்ப்பு இருப்பதாக நிலவி வரும் யூகங்களை மறுத்த திருமாவளவன், 5 ஆண்டுகளுக்கு எவ்வித இடையூறு இல்லாமலும் தவெக ஆட்சி தொடர விசிக என்றும் துணை நிற்கும் என்றார். தாங்கள் அளித்த வாக்குறுதியைக் கட்டாயம் காப்பாற்றுவோம் என்றும், தவெக ஆட்சிக்குக் கொடுத்த ஆதரவிலிருந்து எப்போதும் பின்வாங்க மாட்டோம் என்றும் உறுதிபடக் கூறினார். மேலும், நாளை தவெக நடத்தும் தோழமைக் கூட்டணி கட்சிகளின் கூட்டத்தில் விசிகவின் சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் முக்கியத் தலைவர்கள் அனைவரும் தவறாமல் பங்கேற்பார்கள் என்றும் அவர் தெரிவித்தார்.
