ஜூலை 27-ல் தமிழகம் முழுவதும் விசிக ஆர்ப்பாட்டம் - திருமாவளவன் அறிவிப்பு!
நீட் வினாத்தாள் கசிவுக்குப் பொறுப்பேற்று மத்தியக் கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலக வலியுறுத்தியும், டெல்லியில் போராடிய மாணவர்கள் மீது நடத்தப்பட்ட தடியடியைக் கண்டித்தும் ஜூலை 27-ம் தேதி தமிழகம் முழுவதும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி (விசிக) சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் எனத் தலைவர் தொல். திருமாவளவன் எம்பி அறிவித்துள்ளார்.
விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் விடுத்துள்ள அறிக்கையில், தர்மேந்திர பிரதான் மத்தியக் கல்வி அமைச்சராகப் பொறுப்பேற்றதற்குப் பிறகு நீட் உள்ளிட்ட பல்வேறு நுழைவுத் தேர்வுகள் மற்றும் தகுதித் தேர்வுகளுக்கான வினாத்தாள்கள் பலமுறை கசிந்து, தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டதால் சுமார் 7.5 கோடி மாணவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இதற்குப் பொறுப்பேற்று அவர் உடனடியாகப் பதவி விலக வேண்டும்.
நீட் வினாத்தாள் கசிவைக் கண்டித்து டெல்லியில் காக்ரோச் ஜனதா பார்ட்டி சார்பில் நாடாளுமன்றத்தை நோக்கி நடத்தப்பட்ட பேரணியில் கலந்துகொண்ட மாணவர்கள் மீது மத்திய அரசின் காவல்துறை கண்ணீர்ப் புகைக் குண்டுகளை வீசியும், தடியடி நடத்தியும் கொடூரத் தாக்குதல் நடத்தியுள்ளது.

மாணவர்களுக்கு ஆதரவாகவும் நீதி கேட்டும் பிரதமர் இல்லம் முன்பு போராட்டம் நடத்திய மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி மற்றும் காங்கிரஸ் எம்.பி-க்கள் காவல்துறையினரால் மோசமாக நடத்தப்பட்டுக் கைது செய்யப்பட்டுள்ளனர். மோடி அரசின் இந்தச் சர்வாதிகாரப் போக்கு ஜனநாயக மாண்புகளைப் படுகொலை செய்வதாக உள்ளது.
போராடி வரும் மாணவர்களின் நியாயமான கோரிக்கைகளுக்கு விசிக முழு ஆதரவு அளிப்பதாகத் தெரிவித்த திருமாவளவன், கீழ்க்கண்ட கோரிக்கைகளை முன்வைத்துள்ளார்: மத்தியக் கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் உடனடியாகப் பதவி விலக வேண்டும். அமைதியான முறையில் போராடிய மாணவர்கள் மீது வன்முறையை ஏவியவர்கள் மீது சட்டப்படி கடும் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். இச்சம்பவத்திற்குப் பிரதமர் நரேந்திர மோடி வருத்தம் தெரிவிக்க வேண்டும். நீட் தேர்வை முற்றிலுமாக ரத்து செய்து, மாநில அரசே மருத்துவச் சேர்க்கைக்கான தேர்வுகளை நடத்திக்கொள்ள அனுமதிக்க வேண்டும்.
இக்கோரிக்கைகளை வலியுறுத்தி ஜூலை 27 அன்று தமிழகத்தின் அனைத்துச் சட்டமன்றத் தொகுதி மாவட்டங்களிலும் நடைபெறவுள்ள கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஜனநாயக சக்திகள் திரளாகப் பங்கேற்குமாறு அவர் அழைப்பு விடுத்துள்ளார்.
