மாணவர்கள் போராட்டத்திற்கு விசிக ஆதரவு - திருமாவளவன் நேரில் சந்திப்பு!
டெல்லியில் நீட் வினாத்தாள் கசிவு விவகாரத்தில் மத்தியக் கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலகக் கோரி போராட்டத்தில் ஈடுபட்டு வரும் மாணவர்களைச் சந்தித்து விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தனது முழு ஆதரவைத் தெரிவித்துள்ளது. இது குறித்து விசிக தலைவரும் எம்பியுமான தொல். திருமாவளவன் தனது எக்ஸ் சமூக வலைதளப் பக்கத்தில், நீட் வினாத்தாள் முறைகேட்டிற்குப் பொறுப்பேற்று மத்தியக் கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலகக் கோரி CJP சார்பில் தொடர் உண்ணாநிலை போராட்டம் நடைபெற்று வருகிறது.

இதில் பங்கேற்ற சமூக ஆர்வலர் சோனம் வாங்சுக் கைது செய்யப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் சூழலில், ஜந்தர் மந்தரில் போராடி வரும் மாணவர்களை நானும் எம்பி ரவிக்குமாரும் நேரில் சந்தித்து ஆறுதல் கூறினோம்.
நாடாளுமன்றத்தை நோக்கி அமைதியான முறையில் பேரணியாகச் சென்ற மாணவர்கள் மீது டெல்லி காவல்துறையினரும், சீருடை அணியாத நபர்களும் சேர்ந்து கொடூரமாகத் தடியடி நடத்தியுள்ளனர். இதில் ஏராளமான இளைஞர்களும் மாணவர்களும் காயமடைந்துள்ளனர்.

பாதிக்கப்பட்ட மாணவர்களின் போராட்டத்திற்கு விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் முழுமையான ஆதரவைத் தெரிவித்துள்ளோம். மேலும், இந்த அநீதி குறித்து நாடாளுமன்றத்திலும் அழுத்தமாகக் குரல் எழுப்புவோம் என உறுதியளித்துள்ளோம்.
