தினம் ஒரு திருப்பாவை.... பாசுரம் 10

 
திருப்பாவை

மார்கழி 10... தினம் ஒரு திருப்பாவை பாசுரம் 10: 

நோற்றுச் சுவர்க்கம் புகுகின்ற அம்மனாய்!
மாற்றமும் தராரோ? வாசல் திறவாதார்
நாற்றத் துழாய்முடி நாராயணன் நம்மால்
போற்றப் பறைதரும் புண்ணியனால் பண்டொருநாள்
கூற்றத்தின் வாய்வீழ்ந்த கும்பகர்ணனும்
தோற்றும் உனக்கே பெருந்துயில் தந்தானோ?
ஆற்ற அனந்தல் உடையாய்! அருங்கலமே!
தேற்றமாய் வந்து திறவேலோர் எம்பாவாய்.

திருப்பாவை

பொருள் விளக்கம்! 

தூக்கத்தைத் தோற்கடிக்கும் திருநாமம்

முற்பிறவியில் நாராயணனை நினைத்து நோன்பிருந்த பலனால் இப்போது சொர்க்கம் போன்ற சுகத்தில் மூழ்கியவளே. கதவைத் திறக்காவிட்டாலும் பரவாயில்லை. பேசவும் மாட்டாயா? நறுமணம் வீசும் துளசியைச் சூடிய நாராயணனை நாம் போற்றி பாடினால், அவன் நோன்புக்குரிய பலனை உடனே தருவான். அதைக் கேட்கக் கூட எழாமல் இருக்கிறாயா?

திருப்பாவை

ஒரு காலத்தில் கும்பகர்ணன் தூக்கத்துக்கு உதாரணம் என்றார்கள். உன் தூக்கத்தைப் பார்த்தால் அவனையே மிஞ்சுவாய் போல தெரிகிறது. சோம்பல் உன்னை முழுவதும் ஆட்கொண்டுவிட்டதா? இவ்வளவு அழைத்தும் அசையாதது ஏன்? அரிய அணிகலனே, இனியும் தாமதம் வேண்டாம்.

நன்றாகத் தூங்கினால் கும்பகர்ணன் என்று சொல்வோம். இது இன்று தோன்றிய நகைச்சுவை அல்ல. ஆண்டாள் பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே இதைச் சொன்னாள். சிரிப்பு ஆயுளை வளர்க்கும். வாய்விட்டு சிரித்தால் நோய் விலகும். திருப்பாவையின் வழியே அந்த நன்மையை அவள் நமக்குத் தந்தாள்.