திருப்பதி திருக்குடை ஊர்வலம்... நாளை சென்னையின் முக்கிய பகுதிகளில் போக்குவரத்து மாற்றம்!

 
திருப்பதி திருக்குடை ஊர்வலம்

 

திருக்குடை சேவாசமிதி அறக்கட்டளை சார்பில் திருப்பதி திருக்குடை பாதயாத்திரை ஊர்வலம் நாளை புதன்கிழமை அன்று கோலாகலமாக நடைபெற உள்ளது. இதனையொட்டி பொதுமக்களுக்கும் பக்தர்களுக்கும் எந்தவிதமான இடையூறும் ஏற்படாத வகையில் சென்னை நகரில் விரிவான போக்குவரத்து மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. ஊர்வலம் செல்லும் பாதைகளில் குறிப்பிட்ட நேரத்திற்கு வாகனங்கள் செல்ல அனுமதி இல்லை என்று காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி நாளை காலை 8 மணி முதல் ஊர்வலம் வால்டாக்ஸ் சாலையைக் கடக்கும் வரை என்.எஸ்.சி போஸ் சாலை மற்றும் மின்ட் சாலையில் போக்குவரத்து தடை செய்யப்படுகிறது. இந்தச் சமயத்தில் வாகன ஓட்டிகள் மாற்றுப் பாதைகளான ஈ.வெ.ரா சாலை, ராஜாஜி சாலை மற்றும் பிரகாசம் சாலையைப் பயன்படுத்தலாம் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும் மதியம் 3 மணி முதல் ஊர்வலம் யானைகவுனி பாலத்தைக் கடக்கும் வரை வால்டாக்ஸ் சாலைப் பகுதியில் வாகனங்கள் அனுமதிக்கப்படாது.

இது தவிர சூளை ரவுண்டானா, பெரம்பூர் பேரக்ஸ் சாலை மற்றும் ஓட்டேரி சந்திப்பு உள்ளிட்ட பல்வேறு முக்கிய இடங்களிலும் போக்குவரத்து மாற்றங்கள் அமல்படுத்தப்படவுள்ளன. ஐ.சி.எப் மற்றும் மேடவாக்கம் டேங்க் ரோடு பகுதிகளில் இருந்து வரும் வாகனங்கள் தற்காலிகமாக வேறு வழிகளுக்குத் திருப்பி விடப்படும் என்றும் காவல்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.