தினம் ஒரு திருப்பாவை .... பாசுரம் 14!

 
திருப்பாவை

மார்கழி 14... தினம் ஒரு திருப்பாவை... பாசுரம் 14

பக்தியும் விடியலும் உன்னை எதிர்பார்க்கின்றன

உங்கள் புழக்கடை தோட்டத்து வாவியுள்
செங்கழுநீர் வாய்நெகிழ்ந்து ஆம்பல் வாய் கூம்பின காண்
செங்கல் பொடிக்கூறை வெண்பல் தவத்தவர்
தங்கள் திருக்கோயில் சங்கிடுவான் போதந்தார்
எங்களை முன்னம் எழுப்புவான் வாய்பேசும்
நங்காய்! எழுந்திராய் நாணாதாய் நாவுடையாய்!
சங்கொடு சக்கரம் ஏந்தும் தடக்கையன்
பங்கயக் கண்ணானை பாடலோர் எம்பாவாய்.

திருப்பாவை

 பொருள் விளக்கம்

எங்களை முன்னதாகவே வந்து எழுப்புவேன் என்று வீரமாக சொன்னவளே, கொடுத்த வாக்கை மறந்து அமைதியாக கிடப்பதற்கு வெட்கமே இல்லையா? உன் வீட்டின் பின்வாசல் தோட்டத்து தடாகத்தில் செங்கழுநீர் மலர்கள் மலர்ந்து விட்டன. ஆம்பல் மலர்கள் தலை கவிழ்ந்து, இரவின் முடிவை அறிவிக்கின்றன.காவி உடை அணிந்த துறவிகள் வெண்பற்கள் ஒளிவீச, கோயில்களை நோக்கி நடந்து செல்கின்றனர். திருச்சங்கு முழங்கப் போகும் நேரம் வந்துவிட்டது. உலகமே விழித்து பக்தியில் நனைந்து கொண்டிருக்கிறது.

இப்படியிருக்க, சங்கும் சக்கரமும் ஏந்திய வலிமையான கரங்களையுடைய, தாமரை கண்கள் கொண்ட கண்ணனைப் பாட இன்னும் நீ எழாமல் இருப்பது ஏன்? காலம் கடந்து விடுகிறது. பக்தியும் விடியலும் உன்னை எதிர்பார்த்து நிற்கின்றன.

 திருப்பாவை

வாக்கு கொடுப்பது எளிது. அதை காப்பாற்றுவது தான் சோதனை. செய்ய முடியாததைச் சொல்லிவிட்டு பின்னர் மறந்து விடுவது மனிதப் பண்பல்ல.வாக்கு கொடுத்து ஏமாற்றுபவர்கள், வெட்கமே இல்லாமல் திரிவதை ஆண்டாள் கடுமையாக சாடுகிறாள். சொன்னதை மறப்பதும், சொல்லியதைச் செய்யாமல் ஒதுங்குவதும் தவறு. அது மனசாட்சியையே காயப்படுத்தும் செயல்.நாக்கு உண்மையை மட்டும் பேச வேண்டும். சொன்ன வார்த்தைக்கு உயிர் கொடுக்க வேண்டும். வாக்கும் வாழ்க்கையும் ஒன்றாக இருக்க வேண்டும் என்பதே இந்தப் பாடல் சொல்லும் தெளிவான பாடம்.