தினம் ஒரு திருப்பாவை... பாசுரம் 2 !
மார்கழி 2.. திருப்பாவை பாசுரம் 2:
பாவை நோன்பின் நெறிகள் – ஆண்டாள் சொல்லும் ஆன்ம வழி
வையத்து வாழ்வீர்காள்! நாமும் நம் பாவைக்குச்
செய்யும் கிரிசைகள் கேளீரோ பாற்கடலுள்
பையத்துயின்ற பரமன் அடிபாடி
நெய்யுண்ணோம் பாலுண்ணோம் நாட்காலே நீராடி
மையிட்டு எழுதோம் மலரிட்டு நாம் முடியோம்
செய்யாதன செய்யோம் தீக்குறளை சென்றோதோம்
ஐயமும் பிச்சையும் ஆந்தனையும் கைகாட்டி
உய்யுமா றெண்ணி உகந்தேலோர் எம்பாவாய்.

திருமால் கண்ணனாக அவதரித்து வாழும் ஆயர்பாடி சிறுமிகளே! நாமெல்லாம் இந்த மாய உலகிலிருந்து விடுபட்டு, பரந்தாமன் திருவடிகளை அடைய வேண்டுமானால், நாம் எடுத்திருக்கும் பாவை விரதத்தை முறையாகக் கடைப்பிடிக்க வேண்டும். அதற்காக, நெய் சாப்பிடக்கூடாது, பால் குடிக்கக்கூடாது. அதிகாலையிலேயே எழுந்து நீராட வேண்டும். கண்ணில் மை தீட்டாதது நெறி. கூந்தலில் மலர் சூடக்கூடாது; ஏனெனில் மார்கழியில் மலரும் ஒவ்வொரு மலரும் மாலவனுக்கே அர்ப்பணிக்கப்பட்டவை. மனதில் தீய எண்ணங்களை வரவிடக்கூடாது. பிறரைப்பற்றி கோளுறுவது கூட பாவம் என்பதால் தவிர்க்க வேண்டும். இல்லாதவர்களுக்கும், துறவிகளுக்கும், ஞானிகளுக்கும் போதுமான அளவு தானம் செய்ய வேண்டும்.

பாடல் பொருள் விளக்கம்:
ஒரு செயலை வெற்றிகரமாக நிறைவேற்ற கட்டுப்பாடு அவசியம். வாயை அடக்கினால் மனமும் அடங்கும்; மனம் அடங்கினால், கடவுள் மனக்கண்ணில் தெளிவாகத் தோன்றுவார். அதனால்தான் பாவை நோன்பில் நெய், பால் ஆகியவற்றைத் தவிர்த்து உடலைப் பரிசுத்தமாக்க வேண்டும் என்பதோடு, தீய சொற்கள் மற்றும் தீய செயல்களைத் துறந்து மனத்தையும் சுத்தப்படுத்த வேண்டும் என்று ஆண்டாள் அறிவுறுத்துகிறாள்.
