தினம் ஒரு திருப்பாவை.... பாசுரம் 23!

 
திருப்பாவை

மார்கழி 23... தினம் ஒரு திருப்பாவை.... பாசுரம் 23!

கண்ணனையே கேட்ட ஆயர்குலப் பெண்கள்

மாரி மலைமுழஞ்சில் மன்னிக்கிடத்துறங்கும்
சீரிய சிங்கம் அறிவுற்றுத் தீவிழித்து
வேரி மயிர்பொங்க எப்பாடும் பேர்ந்துதறி
மூரி நிமிர்ந்து முழங்கப் புறப்பட்டு
போதருமா போலே நீ பூவைப்பூ வண்ணா! உன்
கோயில் நின்று இங்ஙனே போந்தருளி கோப்புடைய
சீரிய சிங்கா சனத்திருந்து யாம்வந்த
காரியம் ஆராய்ந்து அருளேலோர் எம்பாவாய்.

திருப்பாவை

பொருள் விளக்கம்:

சிங்கம் குகையில் உறங்கி, மழைக்காலம் முடிந்ததும் விழிப்பது போல, காயாம்பூ நிற கண்ணனே நீயும் விழிக்க வேண்டும் என்ற பக்திப் பூர்வமான வேண்டுகோள் இது. குகையில் உறங்கிய சிங்கத்தின் கண்களில் நெருப்பு பொறி பறப்பது போல, அதன் பிடரி மயிர் சிலிர்த்து கர்ஜனையுடன் வெளியே வருவது போல, கண்ணனும் வீரத்துடன் எழ வேண்டும் என்று பக்தர்கள் மனமுருகி அழைக்கிறார்கள்.

நான்கு திசைகளையும் பார்த்து பெருமையுடன் நடக்கும் சிங்கம் போல, நீயும் உன் கோயிலிலிருந்து வீரநடை போட்டு வெளியே வந்து எங்களுக்குக் காட்சி தர வேண்டும் என்பதே அந்த ஆசை. அருளும், வலிமையும் ஒன்றாகக் கலந்து நிற்கும் அந்த நடையை பக்தர்கள் காண விரும்புகிறார்கள்.

அழகிய வேலைப்பாடுகள் நிறைந்த சிம்மாசனத்தில் நீ அமர்ந்து, நாங்கள் எதற்காக வந்தோம் என்பதை அறிந்து கொள்ள வேண்டும் என்று அவர்கள் வேண்டுகின்றனர். எங்கள் குறைகளை கேட்டு, அவற்றை பரிசீலனை செய்து, அருளுடன் நிறைவேற்ற வேண்டும் என்பதே இந்த பிரார்த்தனையின் சாரம். கண்ணனின் ஒரு பார்வையே போதுமானது என்ற நம்பிக்கையோடு, பக்தர்கள் காத்து நிற்கிறார்கள்.

திருப்பாவை

எதிரே நிற்பவன் கடவுள் என்பதற்காக வீடு, பொருள், நகை, வாகனம் என கேட்க வேண்டியதில்லை. அவை நமக்கு விதிக்கப்பட்டிருந்தால், உழைப்பின் வழியாகவே வந்து சேரும். அதனால் இறைவனிடம் நியாயமான வேண்டுதல்களையே வைக்க வேண்டும் என்பதே உண்மை.இதைத்தான் ஆயர்குலப் பெண்கள் காட்டினார்கள். நாங்கள் கேட்பது நியாயம் என்றால் மட்டுமே கொடு என்று அவர்கள் சொன்னார்கள். அவர்கள் சொத்துகளைக் கேட்கவில்லை. வசதிகளைக் கேட்கவில்லை.அவர்கள் கேட்டது ஒரே ஒன்றைதான். அந்தக் கண்ணனையே கேட்டார்கள். அவனோடு ஒன்றாகிவிட்டால் சோறும் தேவையில்லை. வாகனமும் தேவையில்லை. எல்லாவற்றுக்கும் மேலான பேரின்பம் தானாகவே கிடைத்துவிடும் என்பதையே அவர்கள் உலகுக்குச் சொன்னார்கள்.