தினம் ஒரு திருப்பாவை... பாசுரம் 27!

 
திருப்பாவை

மார்கழி 27... தினம் ஒரு திருப்பாவை... பாசுரம் 27!

  இனிப்பில் கலந்த பக்தி...

கூடாரை வெல்லும்சீர்க் கோவிந்தா! உன்தன்னைப்
பாடிப்பறை கொண்டு யாம்பெறு சம்மானம்
நாடு புகழும் பரிசினால் நன்றாக
சூடகமே தோள்வளையே தோடே செவிப்பூவே
பாடகமே என்றனைய பல்கலனும் யாமணிவோம்
ஆடை உடுப்போம் அதன்பின்னே பாற்சோறு
மூடநெய் பெய்து முழங்கை வழிவார
கூடி யிருந்து குளிர்ந்தேலோர் எம்பாவாய்.
திருப்பாவை

பொருள் விளக்கம்:

 

எதிரிகளை வென்று காக்கும் கோவிந்தனே என்று பாடி, அவன் அருளைப் பெற ஆயர்குலப் பெண்கள் வந்தனர். அருள் செல்வம் வேண்டும் என்றார்கள். அதோடு உலக வாழ்வுக்குத் தேவையான பொருள் செல்வமும் வேண்டுமென்றார்கள். நாடு புகழும் வாழ்க்கை அதனால் தான் அமையும் என நம்பினர்.

கையில் சூடகம் வேண்டும் என்றார்கள். தோளில் பாஹுவலயம் வேண்டும் என்றார்கள். காதில் தோடு, கர்ணப்பூ வேண்டும் என்றார்கள். காலில் பாடகம் அணிய வேண்டும் என்றார்கள். புத்தாடைகள் கிடைக்க வேண்டும் என்றும் மனமுருகி கேட்டார்கள்.

விரதம் நிறைவடையும் நாளில், அனைவரும் ஒன்றாக அமர வேண்டும் என்றார்கள். கோவிந்தனுடன் சேர்ந்து உணவு உண்ண வேண்டும் என்றார்கள். கையில் நெய் வழிய பால்சோறு சாப்பிடும் பேறு வேண்டும் என்று வேண்டினர். இதுவே அவர்கள் கேட்ட முழு வரமாக இருந்தது.

திருப்பாவை

கூடாரை வெல்லும் என்ற சொல்லிலிருந்து கூடாரவல்லி என்ற பெயர் வந்தது. இன்றும் பெருமாள் கோயில்களிலும் வைணவர் வீடுகளிலும் கூடாரவல்லி விழா கொண்டாடப்படுகிறது. அந்த நாளின் சிறப்பு உணவு அக்கார அடிசில். நெய் மிதக்கும் அந்த இனிப்பு அனைவரையும் கவரும்.

சர்க்கரைப் பொங்கலை நினைவூட்டும் இந்த உணவு சுவையில் தனிச்சிறப்பு கொண்டது. விரதத்தின் தொடக்கத்தில் நெய், பால் ஆகியவற்றைத் தவிர்த்த ஆயர்குலப் பெண்கள், கண்ணனின் தரிசனம் கிடைத்த மகிழ்ச்சியில் இப்போது இந்த இனிப்பை சாப்பிடுகிறார்கள். அது ஆனந்தத்தின் அடையாளமாக பார்க்கப்படுகிறது.

பால்சோறு என்பது பாற்கடலையும் குறிக்கிறது. கண்ணனை கண்ட மகிழ்ச்சியில், நாங்கள் அவன் பள்ளிகொள்ளும் பாற்கடலிலேயே இருக்கிறோம் என அவர்கள் உணர்கிறார்கள். இதுவே நித்ய சுகம் என்று நினைத்து, இந்த ஆனந்தம் என்றும் நிலைக்க வேண்டும் என கண்ணனிடம் வேண்டுகிறார்கள்.