மில் அதிபர் மீது மர்மக் கும்பல் சராமாரி அரிவாள் வெட்டு... !

 
திருப்பூர்

திருப்பூர் மாவட்டம் தாராபுரம் உப்புத்துறைபாளையத்தைச் சேர்ந்த 60 வயது தங்கவேல் என்பவர் கணபதிபாளையத்தில் எண்ணெய் ஆலை மற்றும் அரிசி ஆலை உள்ளிட்ட நிறுவனங்களை நடத்தி வருகிறார். இவர் தனது மாமனார் 80 வயது முத்துசாமி மற்றும் மாமியார் 79 வயது சகுந்தலா ஆகியோரைத் தனது வீட்டில் வைத்துப் பராமரித்து வந்ததால், அவர்களது 40 ஏக்கர் மதிப்புள்ள சொத்துக்களைத் தனக்கு எழுதி வாங்கியுள்ளார். இந்த மாபெரும் சொத்து விவகாரத்தில் தங்கவேலுவுக்கும், அவரது மனைவியின் தங்கை கணவரான பாலதண்டபாணிக்கும் இடையே நீண்ட நாட்களாகக் கடுமையான முன்விரோதம் இருந்து வந்தது.

ஆம்புலன்ஸ்

இந்நிலையில் நேற்று காலை 6 மணி அளவில் கணபதிபாளையத்தில் உள்ள தனது எண்ணெய் ஆலைக்குச் சென்றுவிட்டுத் தங்கவேல் தனது இருசக்கர வாகனத்தில் வீட்டிற்குப் புறப்பட்டுள்ளார். அவர் ஆலையை விட்டு வெளியே வந்தபோது அங்கு முன்கூட்டியே மறைந்திருந்த ஒரு மர்மக் கும்பல், பயங்கர ஆயுதங்களான அரிவாள் மற்றும் கத்தியால் அவரைச் சரமாரியாக வெட்டிவிட்டுத் தப்பியோடியது. இதில் பலத்த காயமடைந்த அவர் உடனடியாக மீட்கப்பட்டுத் தாராபுரம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுத் தீவிர சிகிச்சை பெற்று வருகிறார்.

போலீசாரின் ஆரம்பகட்ட விசாரணையில், கடந்த ஆண்டு ஜூலை 28 ஆம் தேதி தாராபுரத்தைச் சேர்ந்த சென்னை உயர் நீதிமன்ற வழக்கறிஞர் முருகானந்தம் என்பவர் நிலத் தகராறு காரணமாகக் கூலிப்படையால் வெட்டிக்கொலை செய்யப்பட்டார். இந்தச் சென்னை வழக்கறிஞர் கொலை வழக்கில் 18 பேர் சிறையில் அடைக்கப்பட்டுள்ள நிலையில், அந்தப் பயங்கரக் கொலையை நேரில் பார்த்த மிக முக்கியச் சாட்சியாக இந்தத் தங்கவேல் இருந்துள்ளார். எனவே சாட்சியைத் தீர்த்துக்கட்டச் சிறையில் சதித் திட்டம் தீட்டப்பட்டதா அல்லது 40 ஏக்கர் சொத்து ஆத்திரத்தில் சகலை பாலதண்டபாணி கூலிப்படையை ஏவினாரா என்ற கோணங்களில் போலீசார் தங்களின் விசாரணையை முடுக்கிவிட்டுள்ளனர்.