நெகிழ்ச்சி ... 'குட் டச், பேட் டச்' விழிப்புணர்வால் 5 ஆண்டுகளுக்குப் பின் சிக்கிய போக்சோ குற்றவாளி!

 
pocso

திருவண்ணாமலை மாவட்டம் ஆரணியில் உள்ள அரசுப் பள்ளி ஒன்றில் கடந்த 23-ஆம் தேதி மாணவிகளுக்கு விழிப்புணர்வு கூட்டம் நடத்தப்பட்டது. அங்குள்ள ஆசிரியை ஒருவர் 8-ஆம் வகுப்பு மாணவிகளுக்குப் பாதுகாப்பான தொடுதல் குறித்த ஆலோசனைகளை வழங்கியுள்ளார். அப்போது அசம்பாவிதங்கள் நடந்திருந்தால் அச்சமின்றித் தெரிவிக்க வேண்டும் எனக் கூறி தைரியம் அளித்துள்ளார். ஆசிரியை ஏற்படுத்திய இந்த விழிப்புணர்வால் 8-ஆம் வகுப்பு பயிலும் மாணவி ஒருவர் தனக்கு நேர்ந்த கொடுமையை வெளிப்படுத்தினார்.

பாலியல் பலாத்காரம் இளம்பெண்

கடந்த 2021-ஆம் ஆண்டு 3-ஆம் வகுப்பு படித்தபோது பள்ளி வளாகம் அருகே விளையாடிக் கொண்டிருந்ததாக அந்த மாணவி கூறியுள்ளார். அப்போது நபர் ஒருவர் வலுக்கட்டாயமாகக் கையைப் பிடித்து இழுத்துச் சென்று பாலியல் அக்கிரமம் செய்ததாகத் தெரிவித்துள்ளார். யாரிடமாவது கூறினால் கொலை செய்து விடுவதாக மிரட்டியதால் கடந்த 5 ஆண்டுகளாகப் பயத்தில் தவித்து வந்ததாகக் கதறினார். இதனைக் கேட்டு அதிர்ச்சியடைந்த ஆசிரியை உடனடியாக மாணவியின் தாயாரை அழைத்து முழு விபரத்தையும் கூறியுள்ளார்.

போக்சோ நீதிமன்றம்

தாயார் அளித்த புகாரின் பேரில் ஆரணி அனைத்து மகளிர் காவல் நிலைய அதிகாரிகள் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினர். மாணவி அடையாளம் காட்டியதன் அடிப்படையில் கொசப்பாளையம் பகுதியைச் சேர்ந்த கூலித்தொழிலாளி ஐயப்பன் (42) என்பவர் கைது செய்யப்பட்டார். போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்த அதிகாரிகள் அவரை வேலூர் மத்திய சிறையில் அடைத்து நடவடிக்கை எடுத்தனர்.