திருவண்ணாமலை மகாதீபம்... விடிய விடிய 8,012 சிறப்புப் பேருந்துகள் இயக்கம்!

 
திருவண்ணாமலை  கார்த்திகை மகா தீபத்திருவிழா

திருவண்ணாமலை அருள்மிகு அருணாச்சலேஸ்வரர் திருக்கோயிலில் நடைபெறவுள்ள திருக்கார்த்திகை மகா தீபத் திருவிழாவை முன்னிட்டு, பக்தர்கள் சிரமமின்றிப் பயணம் செய்யும் வகையில் வரும் நவம்பர் 25-ஆம் தேதி வரை தமிழகம் முழுவதும் 8,012 சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படும் எனத் தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகம் அறிவித்துள்ளது. குறிப்பாக, சென்னையின் முக்கியப் பேருந்து முனையங்களிலிருந்து மட்டும் திருவண்ணாமலைக்கு 1,713 சிறப்புப் பேருந்துகள் இயக்கப்பட உள்ளன.

தலைநகர் சென்னையிலிருந்து திருவண்ணாமலைக்குச் செல்லும் பக்தர்களின் வசதிக்காக மூன்று முக்கிய இடங்களிலிருந்து மொத்தம் 1,713 சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படுகின்றன. கிளாம்பாக்கம் பேருந்து முனையம்: 1,023 சிறப்புப் பேருந்துகள். மாதவரம் பேருந்து முனையம்: 400 சிறப்புப் பேருந்துகள். அடையாறு பேருந்து நிலையம்: 290 சிறப்புப் பேருந்துகள்

பெளர்ணமி திருவண்ணாமலை பேருந்து

விழுப்புரம் கோட்ட அரசுப் போக்குவரத்துக் கழக மேலாண் இயக்குநர் சி. சிறீதரன் வெளியிட்டுள்ள தகவலின்படி, விழுப்புரம், கடலூர், திருவண்ணாமலை, வேலூர், காஞ்சிபுரம் மற்றும் திருவள்ளூர் ஆகிய மண்டலங்களிலிருந்து நான்கு நாட்களுக்கு மொத்தம் 8,012 சிறப்புப் பேருந்து நடைகள் இயக்கப்படுகின்றன.

இன்று நவம்பர் 23 பௌர்ணமியை முன்னிட்டு 1,878 சிறப்புப் பேருந்துகளும், மகா தீபத் திருநாளான நவம்பர் 24-ஆம் தேதி 3,055 சிறப்புப் பேருந்துகளும், நவம்பர் 25-ஆம் தேதி 1,947 சிறப்புப் பேருந்துகளும் இயக்கப்பட உள்ளன.

திருவண்ணாமலை கார்த்திகை மகா தீபம்

சென்னை மட்டுமின்றிப் புதுச்சேரி, பெங்களூரு, சேலம், கோயம்புத்தூர், திருப்பூர், வேலூர், திருப்பத்தூர், விழுப்புரம், கடலூர், சிதம்பரம், கள்ளக்குறிச்சி, திண்டிவனம், ஆரணி, செய்யாறு, வந்தவாசி மற்றும் காஞ்சிபுரம் உள்ளிட்ட பல்வேறு முக்கிய ஊர்களிலிருந்தும் திருவண்ணாமலைக்குத் தொடர்ச்சியாகச் சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படுகின்றன.

திருவண்ணாமலை நகருக்குள் போக்குவரத்து நெரிசலைத் தவிர்க்கும் வகையில், நகரின் பல்வேறு நுழைவுப் பகுதிகளில் தற்காலிகப் பேருந்து நிலையங்கள் அமைக்கப்பட்டு, அங்கிருந்து கிரிவலப் பாதைக்குச் செல்ல இணைப்புப் பேருந்து வசதிகளும் செய்யப்பட்டுள்ளன. பக்தர்கள் இந்தச் சிறப்புப் போக்குவரத்து வசதியைப் பயன்படுத்திப் பாதுகாப்பாகப் பயணம் மேற்கொள்ளுமாறு போக்குவரத்துக் கழகம் கேட்டுக்கொண்டுள்ளது.