இனி இவங்களுக்கு அனுமதி இல்ல... திருவண்ணாமலை இடுக்கு பிள்ளையார் கோவிலில் திடீர் கட்டுப்பாடுகள் விதிப்பு!
திருவண்ணாமலை கிரிவலப் பாதையில் அமைந்துள்ள புகழ்பெற்ற இடுக்கு பிள்ளையார் கோவிலில் அடுத்தடுத்து அசம்பாவிதங்கள் அரங்கேறியுள்ளன. கடந்த 24ம் தேதி நள்ளிரவு கிரிவலம் சென்ற ஆந்திராவைச் சேர்ந்த மணிக்குமார் என்ற 36 வயது வாலிபர் குகைப் பாதையில் சிக்கினார். உடல் பருமன் காரணமாகக் குறுகிய வழியில் சிக்கிய அவருக்குக் கடும் மூச்சுத்திணறல் ஏற்பட்டுப் பரிதாபமாக உயிரிழந்தார். இந்தச் சோகம் மறைவதற்குள், அடுத்த நாளிலேயே ஆந்திராவைச் சேர்ந்த பெண் பக்தர் ஒருவரும் அதே குறுகிய குகைப் பாதையில் சிக்கி பெரும் போராட்டத்திற்கு பிறகே மீட்கப்பட்டார்.
கிரிவலப் பாதையில் உள்ள இந்த ஆலயத்தில் மிகவும் சிறிய குகை போன்ற அமைப்பில் 3 வாசல்கள் அமைந்துள்ளன. பக்தர்கள் பின்வாசல் வழியாகப் படுத்தபடி நுழைந்து, மெல்லக் கைகளை ஊன்றி நகர்ந்து முன்வாசல் வழியாக வெளியே வந்து தரிசனம் செய்வர். ஆனால் அடுத்தடுத்து பக்தர்கள் குறுகிய பாதையில் மாட்டி உயிருக்குப் போராடும் சம்பவங்கள் நிகழ்ந்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. பக்தர்களின் உயிர் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு உடனடியாகக் கோவில் நிர்வாகம் சார்பாக அதிரடி நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.
தொடர் சம்பவங்களைத் தொடர்ந்து இடுக்கு பிள்ளையார் கோவில் நிர்வாகம் சார்பில் குறுகிய குகைப் பாதை நுழைவாயிலில் எச்சரிக்கைப் பதாகை வைக்கப்பட்டுள்ளது. "உடல் பருமன் உள்ளவர்களுக்கும், உடல்நலக் குறைவு உள்ளவர்களுக்கும் குகைப் பாதைக்குள் செல்ல அனுமதி இல்லை" என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. பக்தர்கள் அசம்பாவிதங்களைத் தவிர்க்க நிர்வாகத்தின் இந்த விதிகளையும் வழிகாட்டுதல்களையும் தவறாமல் பின்பற்ற வேண்டும் என வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.
