46 ஆண்டுகள் காதல் வாழ்க்கை! மனைவி இறந்த ஒரு மணி நேரத்தில் கணவரும் உயிரிழப்பு
சென்னை திருவொற்றியூரில் 46 ஆண்டுகளுக்கு முன்பு காதலித்து திருமணம் செய்துகொண்ட வயதான தம்பதி அடுத்தடுத்து உயிரிழந்த சம்பவம் குடும்பத்தினர் மற்றும் உறவினர்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.திருவொற்றியூரைச் சேர்ந்த பக்கிரி (75), குப்புலட்சுமி (68) தம்பதியினர் கடந்த 46 ஆண்டுகளாக இணைந்து வாழ்ந்து வந்தனர். இவர்களுக்கு ஐந்து பிள்ளைகள் உள்ளனர். பக்கிரி நுரையீரல் தொற்றால் பாதிக்கப்பட்ட நிலையில், கடந்த அக்டோபர் 2-ம் தேதி சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்.

மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த கணவரைப் பார்ப்பதற்காக குப்புலட்சுமி வீட்டிலிருந்து புறப்படத் தயாராகிக் கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராதவிதமாக அவர் வீட்டிலேயே திடீரென மயங்கி விழுந்து உயிரிழந்தார். கணவரைப் பார்க்கச் செல்லத் தயாரான நேரத்தில் அவர் உயிரிழந்தது குடும்பத்தினரை அதிர்ச்சியில் ஆழ்த்தியது.
இந்தச் சம்பவம் நடந்த சுமார் ஒரு மணி நேரத்திற்குப் பிறகு, ஸ்டான்லி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த பக்கிரியும் உயிரிழந்தார். 46 ஆண்டுகளாக ஒன்றாக வாழ்ந்த தம்பதியினர் அடுத்தடுத்து உயிரிழந்தது அவர்களது பிள்ளைகள், உறவினர்கள் மற்றும் அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
