"இது கேடு கெட்ட ஆட்சிமுறை... இலவசம் என்பது தேசத்தை நாசமாக்கிய சொல்!" - சீமான் ஆவேசம்!

 
சீமான் சீமான்

"தமிழகத்தில் நடப்பது மக்கள் அரசியல் அல்ல, வெறும் விளம்பர அரசியல் தான்!" என்று நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் திமுக அரசை மிகக் கடுமையாக விமர்சித்துள்ளார். காட்டங்குளத்தூரில் நடந்த மாணவர் சந்திப்பில் அவர் பேசிய கருத்துக்கள் தற்போது அரசியல் வட்டாரத்தில் பெரும் அனலைக் கிளப்பியுள்ளன.

"மகளிர் உரிமைத் தொகை என்று 5,000 ரூபாய் கொடுக்கிறீர்களே, அது உங்கள் அப்பன் வீட்டுச் சொத்தா? அல்லது பரம்பரைச் சொத்தை விற்றுக் கொடுக்கிறீர்களா?" என்று கேள்வி எழுப்பினார். இலவசங்களை அறிவிப்பதே ஒரு கேடு கெட்ட ஆட்சிமுறை என்றும், இது மக்களைப் பிச்சைக்காரர்களாகவே வைத்திருக்கும் முயற்சி என்றும் சாடினார்.

சீமான்

"பத்தரை லட்சம் கோடி ரூபாய் கடன் வாங்கிவிட்டு எதைத் தரமாகச் செய்திருக்கிறீர்கள்? பட்டினியால் இறந்தால் கட்டையில் எரிக்காமல் மின்சாரத்தில் எரிப்பதுதான் வளர்ச்சியா? ஆன்லைனில் பிச்சை எடுப்பதுதான் டிஜிட்டல் வளர்ச்சியா?" எனத் தனது பாணியில் விளாசினார்.

மாணவர்கள் அரசியலில் இருந்து விலகி நிற்கக் கூடாது. பிறப்பு முதல் இறப்பு வரை மனிதனின் வாழ்வைத் தீர்மானிப்பது அரசியல் தான். அதைத் தெரிந்து கொள்வது அவசியம் என்றார்.

"ஆள் மாறுகிறது, ஆனால் ஆட்சி முறை மாறவில்லை. எந்தக் கட்சி வந்தாலும் லஞ்சம், ஊழல், சாராயம், பாலியல் கொடுமைகள் மட்டும் குறையவே இல்லை. ஒரு தொகுதிக்கு 20 கோடி ரூபாய் வரை செலவு செய்துவிட்டு, பின் லாபம் பார்க்கவே அரசியல்வாதிகள் நினைக்கிறார்கள்" என்று குற்றம் சாட்டினார்.

சீமான்

"யார் இலவச பஸ் பயணம் கேட்டது? எங்களுக்குத் தேவையானது தரமான பேருந்துகள் மற்றும் அந்தப் பேருந்துகள் ஓடுவதற்குத் தரமான சாலைகள் தான்" என்று சீமான் பேசினார்.

சட்டமன்றத் தேர்தல் நெருங்கி வரும் வேளையில், திமுக அரசின் 'இலவசத் திட்டங்கள்' மற்றும் 'கடன் சுமை' ஆகியவற்றை முன்வைத்து சீமான் தனது தாக்குதலைத் தீவிரப்படுத்தியுள்ளார். குறிப்பாக, இளைஞர்கள் மற்றும் மாணவர்கள் மத்தியில் மாற்றத்திற்கான விதையை விதைக்க அவர் இந்த மேடையைப் பயன்படுத்திக் கொண்டுள்ளார்.