"இது காமராஜர் ஆட்சியின் தொடர்ச்சி" – மதுரையில் அமைச்சர் ராஜ்மோகன் பேட்டி; ஆய்வின் போது சர்ச்சை!
தவெக அரசின் தமிழ் வளர்ச்சி மற்றும் தொல்லியல் துறை அமைச்சர் ராஜ்மோகன், மதுரை மற்றும் சிவகங்கை மாவட்டங்களில் உள்ள வரலாற்றுத் தளங்களில் இன்று தீவிர கள ஆய்வு மேற்கொண்டார். இந்த ஆய்வின் போது தவெகவினர் விதிமுறைகளை மீறிச் செயல்பட்டதாகப் புகார்கள் எழுந்துள்ள நிலையில், தற்போதைய தவெக அரசு காமராஜர் ஆட்சியின் தொடர்ச்சி என்று அமைச்சர் பெருமிதத்துடன் குறிப்பிட்டுள்ளார்.
சிவகங்கை மாவட்டம் கீழடி திறந்தவெளி அருங்காட்சியகம் மற்றும் அகழாய்வு தளத்திற்கு அமைச்சர் ராஜ்மோகன் நேரில் சென்று பார்வையிட்டார். மிக முக்கியமான தொல்லியல் பகுதி என்பதால், கீழடி அகழாய்வு தளத்தில் பாதுகாப்பு காரணங்களுக்காகப் பொதுமக்கள் படம் பிடிக்கவோ, ட்ரோன் கேமராக்களைப் பயன்படுத்தவோ கடுமையான தடை விதிக்கப்பட்டுள்ளது. ஆனால், இந்தத் தடையை முற்றிலும் மீறி, அமைச்சருடன் வந்திருந்த தவெக தொண்டர்கள் மற்றும் நிர்வாகிகள் சிலர் ட்ரோன் கேமராவைப் பறக்க விட்டுப் படம் பிடித்தது அப்பகுதியில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
இதனைத் தொடர்ந்து, மதுரை மாவட்டம் மேலூர் அருகே உள்ள மீனாட்சிபுரம் பகுதிக்குச் சென்ற அமைச்சர் ராஜ்மோகன், அங்குள்ள புகழ்பெற்ற சமணர் படுக்கைகள் மற்றும் கி.பி. 1-ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த தமிழ் பிராமி கல்வெட்டுகளைப் பார்வையிட்டார். அப்போது, வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த சமணர் படுக்கையில் படுத்துக்கொண்டே அவர் ஆய்வு செய்த புகைப்படம் சமூக வலைத்தளங்களில் விவாதப் பொருளாக மாறியுள்ளது. இந்தக் கல்வெட்டுகளின் காலம், அவற்றின் வரலாற்றுப் பின்னணி மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து அங்கிருந்த தொல்லியல் துறை அதிகாரிகளிடம் அவர் விரிவாகக் கேட்டறிந்தார்.

ஆய்வுக்குப் பின் செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் ராஜ்மோகன், தங்களது அரசின் கொள்கைகள் மற்றும் செயல்பாடுகள் குறித்து பேசியவர், "இந்த வரலாற்றுப் பொக்கிஷங்களை உலகத்தரம் வாய்ந்த சுற்றுலாத் தலமாக மாற்றத் தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் உடனடியாக எடுக்குமாறு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளேன். இதுவரை தமிழகத்தை ஆண்ட ஆட்சியாளர்களிடம் பழிவாங்கும் அரசியல் இருந்தது. ஆனால், அந்தப் பழிவாங்கும் குணம் தவெக அரசிடம் கிடையாது. மத்திய அரசிடம் உரிய அனுமதி பெற்ற பின்னரே நாங்கள் வெளிநாட்டுப் பயணங்களை மேற்கொண்டோம். கீழடி போன்று தமிழகத்தின் பல்வேறு இடங்களிலும் தொடர்ந்து ஆய்வுகள் மேற்கொள்ளப்படும். நமது கருத்தியல் போர் தொடரும்; உலகிற்குத் தமிழர்களின் பெருமைகளை பறைசாற்றுவோம்."
தொடர்ந்து முதலமைச்சரின் செயல்பாடுகளைக் பாராட்டிப் பேசிய அவர், "சமூக நல விடுதி மாணவர்களை நேரில் சந்தித்து, அங்குள்ள குறைகளைக் கேட்டறிந்து, ஒவ்வொரு மாணவரிடமும் தனித்தனியாகப் பேசி, அடுத்த சில நிமிடங்களிலேயே இராணுவ வேகத்தில் அவர்களின் கோரிக்கைகளை நிறைவேற்றிக் கொடுத்தவர் நமது முதலமைச்சர் ஜோசப் விஜய். ஏழை மாணவர்களுக்காகத் துரிதமாக எடுக்கப்பட்ட இந்த மக்கள் நல நடவடிக்கையே கர்மவீரர் காமராஜர் ஆட்சியின் உண்மையான தொடர்ச்சியாகும்" என்று நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டார்.
