தவெக கூட்டணிக்கு மக்கள் அளித்துள்ள மாபெரும் அங்கீகாரம் இது - திருமாவளவன் வாழ்த்து!

 
திருமாவளவன் விஜய்

மதுராந்தகம் மற்றும் தாராபுரம் இடைத்தேர்தல்களில் தவெக கூட்டணி வேட்பாளர்கள் வெற்றி பெற்றுள்ளமைக்கு விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன் தனது நெஞ்சார்ந்த வாழ்த்துகளையும் மகிழ்ச்சியையும் தெரிவித்துள்ளார்.

மதுராந்தகம் மற்றும் தாராபுரம் தொகுதிகளில் 'மதச்சார்பற்ற சமூகநீதி வெற்றிக் கூட்டணி'யின் சார்பில் போட்டியிட்ட தவெக வேட்பாளர்கள் மரகதம் குமரவேல் மற்றும் சத்யபாமா ஆகியோர் வெற்றி பெற்றிருப்பது, இக்கூட்டணிக்கு மக்கள் அளித்துள்ள தெளிவான அங்கீகாரமாகும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

திருமாவளவன்

கடந்த பொதுத் தேர்தலில் இவ்விரு தொகுதிகளிலும் வெற்றி வாய்ப்பை இழந்த தவெக, தற்போது கணிசமான வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது. இது எமது கூட்டணியை மட்டுமின்றி, தவெக தலைவர் மு. ஜோசப் விஜய் அவர்களின் 'கூட்டணி அரசு' என்கிற மகத்தான நிலைப்பாட்டையும் மக்கள் ஏற்றுக்கொண்டுள்ளனர் என்பதை உணர்த்துவதாக உள்ளது என்றார்.

விடுதலைச் சிறுத்தைகள் அங்கம் வகிக்கும் அணி வெற்றி பெறுவதை உறுதி செய்யும் வகையில் முழு ஈடுபாட்டுடன் களப்பணியாற்றிய விசிக தோழர்களுக்கும், தவெக உள்ளிட்ட கூட்டணிக் கட்சிகளைச் சேர்ந்த தோழர்களுக்கும், வாக்காளப் பெருமக்களுக்கும் அவர் தனது நெஞ்சார்ந்த நன்றிகளைத் தெரிவித்தார். மேலும் வெற்றி பெற்ற வேட்பாளர்களுக்கும் தவெக தலைவர் விஜய்க்கும் தனது வாழ்த்துகளைப் பகிர்ந்து கொண்டுள்ளார்.