“இது ஈரானுக்கு கிடைத்த மாபெரும் வெற்றி!” - ஈரான் அரசு அறிவிப்பு!

 
ஈரான் ஈரான்

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அறிவித்த 2 வார காலப் போர் நிறுத்தத்தை ஈரான் அரசு அதிகாரப்பூர்வமாக ஏற்றுக்கொண்டுள்ளது. இது ஈரானின் உறுதிப்பாட்டிற்கும், அதன் இறையாண்மைக்கும் கிடைத்த வெற்றியாக அந்நாட்டு அரசு வர்ணித்துள்ளது.

ஈரான் வெளியுறவுத் துறை அமைச்சகம் இன்று காலை வெளியிட்டுள்ள அறிக்கையில், அமெரிக்கா தனது தாக்குதல்களை நிறுத்தி வைக்க முன்வந்தது, ஈரானின் ராணுவ மற்றும் ராஜதந்திர பலத்திற்குப் பணிந்ததே ஆகும். இது ஒட்டுமொத்த ஈரான் மக்களுக்கும் கிடைத்த வெற்றி. இந்த வெற்றியை ஈரான் மக்கள் அனைவரும் தெருக்களில் இறங்கி முழு பலத்துடன் கொண்டாட வேண்டும் என அரசு கேட்டுக் கொண்டுள்ளது.

ஈரான்

பிராந்தியத்தில் அமைதியை நிலைநாட்டவும், தேவையற்ற அழிவுகளைத் தவிர்க்கவும் இந்த 2 வார கால அவகாசத்தைப் பயன்படுத்திக் கொள்ளத் தயாராக இருப்பதாகத் தெரிவித்துள்ளது.

அமெரிக்காவின் போர் நிறுத்தத்திற்கு நிபந்தனையாக, ஹார்முஸ் ஜலசந்தியைத் திறக்க ஈரான் ஒப்புக்கொண்டுள்ளது. இந்த ஜலசந்தி திறக்கப்படுவதன் மூலம், தேங்கிக் கிடந்த கச்சா எண்ணெய் மற்றும் எல்பிஜி (LPG) டேங்கர்கள் உலக நாடுகளுக்குத் தடையின்றிச் செல்ல வழிவகை செய்யப்பட்டுள்ளது.

அமெரிக்கா ஈரான்

இந்த அறிவிப்பு வெளியான அடுத்த சில மணிநேரங்களிலேயே சர்வதேசச் சந்தையில் கச்சா எண்ணெய் விலை பீப்பாய்க்கு 95 டாலராகக் குறைந்தது குறிப்பிடத்தக்கது.

அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் நடத்திய கடுமையான தாக்குதல்களுக்குப் பிறகு, ஈரான் தனது மிக முக்கியமான ஆயுதமான 'ஹார்முஸ் ஜலசந்தியை' மூடியது. இதனால் உலகளாவிய எரிபொருள் பற்றாக்குறை ஏற்பட்டது. தற்போது பாகிஸ்தானின் சமரச முயற்சிகளால் இரு நாடுகளும் ஒரு பொதுவான உடன்பாட்டிற்கு வந்துள்ளன.

இஸ்லாமாபாத்தில் வரும் ஏப்ரல் 10-ம் தேதி நடைபெறவுள்ள அமைதிப் பேச்சுவார்த்தையில், ஈரான் வழங்கியுள்ள 10 அம்சத் திட்டம் குறித்து விரிவாக விவாதிக்கப்பட உள்ளது.