"இது துரோகத்துக்குக் கிடைத்த இடைக்கால வெற்றி" - ஸ்டாலின் கடும் தாக்கு!
மதுராந்தகம் மற்றும் தாராபுரம் இடைத்தேர்தல் முடிவுகள் குறித்து திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தனது எக்ஸ் தளப் பக்கத்தில் வெளியிட்டுள்ள அறிக்கை தமிழக அரசியல் களத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
சட்டமன்றத் தேர்தல் நடந்து முடிந்து ஐந்தே மாதங்களில் திணிக்கப்பட்ட இந்த இடைத்தேர்தலில், வாக்களித்த மை அழிவதற்குள் மக்கள் விருப்பத்தை அவமதித்துவிட்டு இருவர் தங்கள் பதவியை ராஜினாமா செய்துவிட்டு ஆளும்கட்சியில் இணைந்தனர். இதுவே அப்பட்டமான ஜனநாயகப் படுகொலை என்றார்.

ஆளுங்கட்சியான தவெக, தனது ஆட்சி பலம், அதிகார பலம், பணபலம் மற்றும் காவல்துறை பலம் அனைத்தையும் தவறாகப் பயன்படுத்தி இந்தத் தேர்தலை எதிர்கொண்டதாகக் குற்றம்சாட்டினார். மேலும், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட பிறகு பல்வேறு கவர்ச்சிகரமான திட்டங்களை அறிவித்தது நடத்தை விதிமீறல் என்றும் சுட்டிக்காட்டினார்.
"ஐந்து நிமிடம் பேசினாலே கொத்து புரோட்டா போட்டுவிடுவார் என்று சொல்லப்பட்டவரை, நான்கு நாட்கள் கொளுத்தும் வெயிலில் அலைய வைத்துவிட்டார் மக்கள். சினிமா கவர்ச்சியை மட்டுமே நம்பி, ரீல்ஸ் காட்சிகளையே கைகொடுக்கும் என்று முதலமைச்சர் விஜய் நம்பினார்" என்று கடுமையாக விமர்சித்தார்.

தவெக அரசுக்கு எதிராகக் களம் கண்ட அனைத்துக் கட்சிகள் பெற்ற வாக்குகளும் ஆட்சிக்கு எதிரான வாக்குகள்தான் என்றும், இந்த அரசு பெரும்பான்மை மக்களால் மீண்டும் நிராகரிக்கப்பட்டுவிட்டது என்றும் அவர் குறிப்பிட்டார்.
குதிரை பேரம், எம்.எல்.ஏ. ஷாப்பிங், பழிவாங்கும் நடவடிக்கைகள் மற்றும் ரீல்ஸ் எடுப்பதில் மட்டும் கவனம் செலுத்தாமல், இனியாவது மக்கள் பணிகளில் ஆட்சியாளர்கள் கவனம் செலுத்த வேண்டும் என எச்சரித்துள்ள மு.க.ஸ்டாலின், கார்்ப்பரேட் மாஃபியாக்களின் கைப்பாவையாக ஆட்சி நடத்தி வரும் முதலமைச்சர் விஜய்யின் முகத்திரையைக் கிழிக்கும் பரப்புரைப் பயணம் தொடரும் என்றும் அறிவித்துள்ளார்.
