“இது ‘புஷ்பா’ பட பாணி ஆட்சி!” - விஜய்யை சீண்டிய உதயநிதி.... ‘சோபா செட்’ டீல் குறித்து புகார்!

 
உதயநிதி உதயநிதி

தமிழக வெற்றிக் கழக அரசு இன்று சட்டமன்றத்தில் தனது பெரும்பான்மையை நிரூபித்த வேளையில், எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் முன்வைத்த விமர்சனங்கள் ஆளுங்கட்சி வரிசையினரை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளன. நம்பிக்கை வாக்கெடுப்பு மீதான விவாதத்தில் பேசிய உதயநிதி ஸ்டாலின், புதிய அரசின் செயல்பாடுகள் ஒரு திரைப்படக் காட்சி போலவே இருப்பதாகச் சாடினார்.

"இந்த அரசு மக்களின் தேவைகளைப் பூர்த்தி செய்வதை விட, ஒரு 'புஷ்பா' பட பாணியில் பில்டப் கொடுத்துக் கொண்டுதான் ஆட்சி நடத்துகிறது. வாக்களித்த மக்களின் நம்பிக்கையை மிகக் குறுகிய காலத்திலேயே இந்த அரசு இழந்துவிட்டது" எனத் தெரிவித்தார்.

உதயநிதி

தவெக அரசின் மீது தங்களுக்கு நம்பிக்கை இல்லை எனக் கூறி, திமுக உறுப்பினர்கள் அனைவரும் வாக்கெடுப்பைப் புறக்கணித்து அவையிலிருந்து வெளிநடப்பு செய்வதாக அறிவித்தார்.

அதிமுக-வின் ஒரு தரப்பு தவெக-விற்கு ஆதரவு அளிப்பது குறித்துப் பேசிய உதயநிதி, ஒரு திடுக்கிடும் தகவலைப் பகிர்ந்து கொண்டார். "அதிமுக-வில் பிளவுபட்டுள்ள ஒரு தரப்புத் தலைவரின் வீட்டிற்குப் புதிய 'சோபா செட்' ஒன்று அனுப்பப்பட்டுள்ளது. அதைத் தொடர்ந்து முதலமைச்சரே நேரில் சென்று அந்தத் தலைவரைச் சந்தித்துப் பேசியுள்ளார். இதன் பின்னணியில் என்ன அரசியல் இருக்கிறது என்பது எங்களுக்குத் தெரியும்" என அவர் மறைமுகமாகக் குற்றம் சாட்டினார். இதன் மூலம் அதிமுக-வின் ஆதரவைத் தவெக அரசு விலை கொடுத்து வாங்கியிருப்பதாக அவர் புகார் தெரிவித்தார். 

உதயநிதி

நாங்கள் வெளிநடப்பு செய்தாலும் இந்த அரசு வெற்றி பெறும் என்பது தெரிந்ததே. ஆனால், இந்த வெற்றி மக்களின் விருப்பத்தைப் பிரதிபலிக்கவில்லை. இது வெறும் எண்களின் விளையாட்டு மட்டுமே என்று கூறி உதயநிதி ஸ்டாலின் தனது உரையை முடித்தார். திமுக மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகள் வெளியேறிய பிறகு, அதிமுக-வின் ஒரு தரப்பு மற்றும் பிற ஆதரவு கட்சிகளின் வாக்குகளுடன் தவெக அரசு தனது பெரும்பான்மையை முறையாக நிரூபித்தது.