“இது விஜய்க்கு Election இல்ல.. Emotion!” - நெல்லையில் கர்ஜித்த விஜய்! “மக்கள் பணத்தை ஒரு பைசா கூட தொடமாட்டேன்”!
தமிழக சட்டமன்றத் தேர்தலுக்கான பரப்புரையில் இன்று நெல்லையில் முகாமிட்ட தமிழக வெற்றி கழகத் தலைவர் விஜய், கே.டி.சி நகர் பகுதியில் திரண்டிருந்த ஆயிரக்கணக்கான தொண்டர்கள் மத்தியில் எழுச்சியுரையாற்றினார்.
விஜய் தனது உரையில் தனது அரசியல் வருகை என்பது திட்டமிடப்பட்ட ஒன்று என்பதை அழுத்தமாகப் பதிவு செய்தார். “கட்சி ஆரம்பிச்சிட்டு ஒவ்வொரு வீட்டுக்குள்ளயும் நான் போகல. ஒவ்வொரு வீட்டுக்குள்ளயும் போன பிறகுதான் (மக்கள் பிரச்சனைகளை நேரில் அறிந்த பிறகுதான்) கட்சியே ஆரம்பிச்சிருக்கேன். மக்கள் பணத்திலிருந்து ஒரு பைசா கூட தொட வேண்டிய அவசியம் எனக்கில்லை. தப்பு நடக்க ஒருபோதும் விடமாட்டேன்,” என உறுதியளித்தார்.
ஆளுங்கட்சியை நேரடியாகத் தாக்கிப் பேசிய விஜய், “ஆட்சி முழுக்க ஊழல், ஊழல் என ஊறிப் போயிருக்கிறது. எந்த முகத்தை வைத்து மக்களிடம் வாக்கு கேட்பீர்கள்? பணத்தால் மக்களை விலைக்கு வாங்கிவிடலாம் என நினைக்காதீர்கள். இந்தத் தேர்தல் முடிவுகளை திமுகவோ அல்லது அவர்களின் பெரிய கூட்டணியோ மாற்றிவிட முடியாது,” எனச் சவால் விடுத்தார்.
கடந்த செப்டம்பர் மாதம் கரூரில் தனது பரப்புரையின் போது ஏற்பட்ட நெரிசல் மற்றும் விபத்து குறித்துப் பேசிய அவர், “கரூர் விவகாரத்தில் என்ன நடந்தது என எல்லாருக்கும் தெரிந்தும், என் மீது திட்டமிட்டு அவதூறு பரப்பினார்கள். மற்றவர்களுக்கு இது வெறும் Election, ஆனால் எனக்கும் என்னோடு நிற்பவர்களுக்கும் இது Emotion” எனத் தெரிவித்தார்.

இன்றைய அரசியல் சூழலில் மக்கள் நல்ல தலைவர்களுக்காக ஏங்குவதாக அவர் குறிப்பிட்டார். “காமராஜர் மாதிரி, எம்.ஜி.ஆர். மாதிரி ஒரு தலைவர் மீண்டும் வர மாட்டார்களா? என நீங்கள் ஏங்குவது எனக்குத் தெரியும். அந்த ஏக்கத்தைப் போக்கத்தான் 'தமிழக வெற்றி கழகம்' வந்துள்ளது. மக்கள் விரோத ஆட்சி நடத்தும் ஸ்டாலின் வேண்டுமா? அல்லது மக்களை நேசிக்கும் உங்கள் விஜய் வேண்டுமா?” எனக் கேள்வி எழுப்பி தனது உரையை முடித்தார்.
