"இது சாதாரண வெற்றியல்ல... பழி சுமத்துபவர்களுக்கு மக்கள் கொடுத்த சம்மட்டி அடி" - வானதி சீனிவாசன்
தமிழ்நாடு, மேற்குவங்கம், புதுச்சேரி மற்றும் அசாம் மாநிலங்களில் நடைபெற்ற இடைத்தேர்தல் முடிவுகள் குறித்து பாரதிய ஜனதா கட்சியின் மூத்த நிர்வாகி வானதி சீனிவாசன் தனது எக்ஸ் தளப் பக்கத்தில் வெளியிட்டுள்ள அறிக்கை அரசியல் களத்தில் மிகுந்த கவனத்தைப் பெற்றுள்ளது.
தேர்தல் ஆணையத்தின் மீது பொய்யான பழிகளைச் சுமத்தி, போராட்டங்கள் என்ற பெயரில் நாட்டின் அமைதியைச் சீர்குலைத்து குறுக்கு வழியில் அதிகாரத்தைக் கைப்பற்ற காங்கிரஸ், கம்யூனிஸ்ட் மற்றும் சில குடும்ப, ஊழல் கட்சிகள் முயற்சிப்பதாக அவர் குற்றம்சாட்டியுள்ளார்.
தமிழ்நாடு, மேற்குவங்கம், புதுச்சேரி மற்றும் அசாமில் நடைபெற்ற இடைத்தேர்தல்களில் எதிர்க்கட்சிகளுக்கு மக்கள் சவுக்கடி கொடுத்துள்ளதாகக் குறிப்பிட்ட அவர், முத்திரைக் குத்தும் வகையில் சில வெற்றிகளைப் பட்டியலிட்டுள்ளார்:

மேற்குவங்கம்: நந்திகிராம் மற்றும் ரெஜிநகர் சட்டமன்றத் தொகுதிகளில் 75% வாக்குகளைப் பெற்று பாஜக அபார வெற்றி. அசாம் மாநிலத்தில் மாகோன் மக்களவைத் தொகுதியில் 51% வாக்குகளுடன் வெற்றி. புதுச்சேரி தட்டாஞ்சாவடி சட்டமன்றத் தொகுதியில் பாஜக கூட்டணியில் உள்ள என்.ஆர். காங்கிரஸ் 61.12% வாக்குகள் பெற்று வெற்றி.
தேர்தல் ஆணையத்தைக் குறை கூறி கலகத்தை ஏற்படுத்த முயலும் சக்திகளுக்கு இந்தத் தேர்தல் முடிவுகள் மக்கள் கொடுத்த சம்மட்டி அடி என்று வர்ணித்துள்ளார்.

இந்தியாவில் வாக்காளர் பட்டியல் தயாரிப்பது, தேர்தல் நடத்துவது மற்றும் வாக்குகளை எண்ணும் பணிகளைத் தலைமைத் தேர்தல் ஆணையமோ அல்லது தேர்தல் ஆணையமோ நேரடியாகச் செய்வதில்லை என்றும், மாநில அரசு ஊழியர்களும் மாவட்ட ஆட்சியர்களும்தான் உண்மையான தேர்தல் அதிகாரிகள் என்ற உண்மை தெரிந்தும் வேண்டுமென்றே அமைதியைச் சீர்குலைப்பவர்களுக்கு எப்போதும் தோல்விதான் மிஞ்சும் என்றும் வானதி சீனிவாசன் எச்சரித்துள்ளார்.
