"இது எங்கள் போர் கிடையாது!" - ஈரானுடனான மோதலில் தலையிட பிரிட்டன் மறுப்பு!

 
பிரிட்டன் பிரதமர் ஸ்டார்மர் பிரிட்டன் பிரதமர் ஸ்டார்மர்

மத்திய கிழக்கு நாடுகளில் நிலவி வரும் போர்ச் சூழலில், அமெரிக்காவுடன் இணைந்து செயல்படப் பிரிட்டன் மறுப்பு தெரிவித்துள்ளது. லண்டன் டவுனிங் ஸ்ட்ரீட்டில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் பிரதமர் கெய்ர் ஸ்டார்மர் இதனை உறுதிப்படுத்தினார்.

அமெரிக்க அதிபர் டிரம்ப், ஈரானின் அணு ஆயுதத் தளங்களை அழிக்கத் தங்களுக்கு உதவ வேண்டும் என விடுத்த வேண்டுகோள் குறித்துக் கேட்டபோது ஸ்டார்மர் கூறுகையில், "எங்கள் மீது சர்வதேச அளவில் எவ்வளவு அழுத்தங்கள் வந்தாலும், அந்தச் சத்தம் எவ்வளவு அதிகமாக இருந்தாலும், நான் இங்கிலாந்தின் தேசிய நலனை முன்னிறுத்தியே முடிவுகளை எடுப்பேன்."

அமெரிக்கா ஈரான்

"இந்த மோதலில் நாங்கள் இழுத்துச் செல்லப்பட மாட்டோம். இது எங்கள் போர் அல்ல என்பதைத் தெளிவாகத் தெரிவித்துக் கொள்கிறேன்."

ஐரோப்பிய நாடுகளின் பாதுகாப்பு மற்றும் உலகளாவிய அமைதிக்கு நேட்டோ அமைப்பு மிக முக்கியமானது என்பதால், அதில் இங்கிலாந்து தொடர்ந்து நீடிக்கும் என்றும், ஆனால் தேவையற்ற போர்களில் பங்கெடுக்கப் போவதில்லை என்றும் அவர் விளக்கமளித்தார். ஹார்முஸ் ஜலசந்தியை ஈரான் முடக்கியுள்ளதால் உலகளவில் எரிவாயு மற்றும் எண்ணெய் விநியோகம் பாதிக்கப்பட்டுள்ளது.

ஈரான் போர்

சுமார் 35 நாடுகளின் தலைவர்கள் பங்கேற்கும் கூட்டத்தில், ஜலசந்தியில் கப்பல் போக்குவரத்தை மீட்டெடுக்கத் தேவையான இராஜதந்திர மற்றும் அரசியல் ரீதியான நடவடிக்கைகளை மட்டுமே பிரிட்டன் மேற்கொள்ளும் என அவர் கூறினார். ராணுவ ரீதியான தாக்குதலுக்கு அவர் ஆதரவு தெரிவிக்கவில்லை.

அமெரிக்காவின் மிக நெருங்கிய நட்பு நாடான பிரிட்டனே போரில் உதவ மறுத்துள்ளது டிரம்பிற்குப் பின்னடைவாகக் கருதப்படுகிறது. பிரிட்டனைத் தொடர்ந்து மற்ற ஐரோப்பிய நாடுகளும் இதே நிலைப்பாட்டை எடுக்க வாய்ப்புள்ளதாகத் தெரிகிறது.