"இது சனாதன சிம்மாசனம் அல்ல, ஜனநாயக சோஃபா!" - உதயநிதிக்கு அமைச்சர் அருண்ராஜ் பதிலடி!

 
தவெக அமைச்சர் அருண்ராஜ் தவெக அமைச்சர் அருண்ராஜ்

தமிழகத்தில் தவெக அரசுப் பொறுப்பேற்ற பிறகு, அமைச்சரவைக் கூட்டங்களில் முதலமைச்சருடன் சேர்ந்து அமைச்சர்களும் சோஃபாவில் அமரும் புதிய நடைமுறை குறித்துத் திமுக மற்றும் தவெக இடையே அரசியல் ரீதியான வார்த்தைப் போர் வெடித்துள்ளது.

திமுக எம்பி கலாநிதி வீராசாமி இல்லத் திருமண விழாவில் பேசிய எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின், தற்போதைய தவெக அரசை "சோஃபா மாடல் ஆட்சி" என்று விமர்சித்திருந்தார். "மக்கள் இந்த சோஃபா மாடல் ஆட்சிக்கு வாக்களித்துவிட்டோமே என்று வருத்தப்படுகிறார்கள்; இந்த ஆட்சியை வீட்டுக்கு அனுப்பும் நாள் வெகுதொலைவில் இல்லை" என்றும் அவர் குறிப்பிட்டிருந்தார்.

உதயநிதியின் இந்த விமர்சனத்திற்குத் தமிழகத் தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் அருண்ராஜ் தற்பொழுது கடுமையான சொற்களால் பதிலடி கொடுத்துள்ளார்.

எதிர்க்கட்சித் தலைவரின் விமர்சனத்திற்குப் பதில் தெரிவித்து அமைச்சர் அருண்ராஜ் வெளியிட்டுள்ள அறிக்கையில், "தந்தை பெரியாரையும், பேரறிஞர் அண்ணாவையும் தங்களது சுயநலத்திற்கு ஒரு கேடயமாகப் பயன்படுத்திக் கொண்டு, தாத்தாவுக்குப் பின் மகன், மகனுக்குப் பின் பேரன் என ஒரே ஒரு குடும்பம் மட்டுமே அதிகாரத்தில் ஊறித் திளைக்கும் 'சனாதன சிம்மாசனத்தில்' சரிந்து கிடக்கும் வாரிசுத் தலைவர் உதயநிதி அவர்களே... அதிகாரத்தைப் பரவலாக்கும், அனைவரையும் சமமாக அமர வைக்கும் 'ஜனநாயக சோஃபாக்கள்' பற்றி உங்களுக்கு எப்படித் தெரிந்திருக்கும்?"

தொடர்ந்து தவெக அரசின் புதிய நிர்வாக நடைமுறையை ஆதரித்துப் பேசிய அமைச்சர் அருண்ராஜ், சோஃபா அமைப்பின் முக்கியத்துவத்தை விளக்கினார்.  இது வெறும் நான்கு அல்லது ஐந்து பேர் மட்டும் அமரும் இடம் அல்ல; மாண்புமிகு முதலமைச்சர் ஜோசப் விஜய் அவர்களின் தலைமையில் ஒட்டுமொத்த அமைச்சர்களும் சம உரிமையோடு அமர்ந்திருக்கும் தூய்மையான ஜனநாயக சோஃபா இது.

ஒரே குடும்பத்தைச் சுற்றி அதிகாரம் சுழலும் சனாதன சிம்மாசனத்தில் அமர்ந்திருப்பவர்களுக்கு, இந்த ஜனநாயக சோஃபாக்கள் பற்றிப் பேசுவதற்கோ அல்லது விமர்சிப்பதற்கோ எந்தவொரு அருகதையோ, யோக்கியதையோ கிடையாது. கடந்த மே 4, 2026 அன்று தமிழ்நாட்டில் வாரிசுகளின் சிம்மாசனம் ஒட்டுமொத்தமாக மக்கள் சக்தியால் ஒழிக்கப்பட்டுவிட்டது என்று சுட்டிக்காட்டியுள்ள அமைச்சர், இனி வரும் காலங்களில் தமிழ்நாட்டில் முதலமைச்சர் விஜய் தலைமையில் அனைவருக்கும் சமமான அதிகாரப் பகிர்வை அளிக்கக்கூடிய இந்த 'ஜனநாயக சோஃபா' மட்டும்தான் நீடிக்கும் என்று தனது அறிக்கையில் மிக ஆக்ரோஷமாகப் பிரகடனப்படுத்தியுள்ளார்.