திமுக தோல்விக்கு கரணம் இதுதான் - உதயநிதி ஓபன் டாக்!
"தேர்தல் களம் ஆடியபோது உண்மையான எதிரி யார் என்று தெரியாமல், இல்லாத எதிரியுடன் சண்டையிட்டுக் கொண்டிருந்தோம். மக்கள் மீது அதிகப்படியான நம்பிக்கை வைத்ததே நம் தோல்விக்குக் காரணம்" என்று திமுக தேர்தல் தோல்வி குறித்து அக்கட்சியின் இளைஞரணி செயலாளரும், தற்போதைய எதிர்க்கட்சித் தலைவருமான உதயநிதி ஸ்டாலின் வெளிப்படையாகச் சுயவிமர்சனம் செய்துள்ளார்.
கடந்த சட்டமன்றத் தேர்தலில் திமுக கூட்டணி எதிர்பாராத தோல்வியைச் சந்தித்து, தவெக புதிய அரசை அமைத்துள்ள சூழலில், திமுக ஏன் தோற்றது என்பது குறித்து அக்கட்சியின் முன்னணி தலைவர்கள் விவாதித்து வருகின்றனர். இன்று காலையில் டி.ஆர்.பாலு "இந்த ஆட்சி நீடிக்காது" என அதிரடி கிளப்பிய நிலையில், அதற்கு முற்றிலும் மாறாக உதயநிதி ஸ்டாலின் கள நிலவரத்தை ஒப்புக்கொண்டு யதார்த்தமாகப் பேசியுள்ளார்.

நிகழ்ச்சி ஒன்றில் திமுக தொண்டர்கள் மற்றும் நிர்வாகிகள் மத்தியில் பேசிய உதயநிதி ஸ்டாலின், தேர்தல் வியூகத்தில் தங்களுக்கு ஏற்பட்ட சறுக்கல்களைப் பட்டியலிட்டார். "நடந்து முடிந்த தேர்தலில் நம்முடைய தோல்விக்கு மிக முக்கியக் காரணம் 'ஓவர் கான்ஃபிடன்ஸ்' தான். மக்கள் நம் பக்கம்தான் இருக்கிறார்கள் என்ற அதீத நம்பிக்கையில் நாம் இருந்துவிட்டோம். களத்தில் நமக்குப் பின்னால் நகர்ந்து கொண்டிருந்த உண்மையான எதிரி யார் என்பதை நாம் கணிக்கத் தவறிவிட்டு, இல்லாத ஒரு எதிரியுடன் தேவையில்லாமல் மேடைகளில் சண்டையிட்டுக் கொண்டிருந்தோம்."

தொடர்ந்து திமுக அரசின் சாதனைகளை மக்களிடம் கொண்டு சேர்த்ததில் தொண்டர்கள் கோட்டை விட்டதைச் சுட்டிக்காட்டிய உதயநிதி, "திமுக ஆட்சியில் கொண்டு வரப்பட்ட திட்டங்களை விளக்கி தமிழ்நாடு முழுவதும் நாம் தெருத் தெருவாகச் சென்று வாக்கு கேட்டோம். ஆனால், மிக முக்கியமான ஒரு தவறை செய்துவிட்டோம். நம்முடைய சொந்த வீடுகளில், நம் குடும்ப உறுப்பினர்களிடமே நம் சாதனைகளைச் சொல்லி ஓட்டுக் கேட்கத் தவறிவிட்டோம். அதுதான் வாக்கு எண்ணிக்கையில் எதிரொலித்துள்ளது" என்று மிகவும் உருக்கமாக பேசினார்.
