லிப்ஸ்டிக் எல்லாம் காரணமில்லை... தபேதார் மாதவியின் பணியிட மாறுதலுக்கு இது தான் காரணம்... முழு விபரம்!
சென்னை மாநகர மேயர் ப்ரியாவின் தபேதாராக பணிபுரிந்து வந்தவர் மாதவி (50). இவர் கடந்த 2 மாதங்களுக்கு முன்பு அதிரடியாக மணலிக்கு மாற்றம் செய்யப்பட்டு உத்தரவிடப்பட்ட நிலையில், தபேதார் மாதவியின் பணியிட மாறுதல் குறித்து சர்ச்சையாக கருத்துக்கள் சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவியது.
சென்னை மேயர் ப்ரியா அரசு சம்பந்தமாக கலந்து கொள்ளும் நிகழ்ச்சிகளிலும், கூட்டங்களிலும் இவரைப் பலரும் பார்த்திருக்கலாம். எப்போதும் தபேதார் சீருடையில் இருக்கும் இவர், லிப்ஸ்டிக் பூசிக் கொண்டு வருவதை வழக்கமாக கொண்டதாக கூறப்படுகிறது. எம்எல்ஏ.,க்கள், அமைச்சர்கள், அதிகாரிகள், மக்கள் நல திட்ட நிகழ்ச்சிகள் என எந்நேரமும் பரபரப்புடன் மேயர் ப்ரியா செல்லும் போது அவரது முன்னே தபேதார் சீருடையில் மாதவி லிப்ஸ்டிக் பூசியபடி ஸ்மார்ட்டாக சென்று வந்ததாகவும், மகளிர் தினத்தின் போது ரிப்பன் பில்டிங்கில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பேஷன் ஷோவில் மாதவி கலந்து கொண்டது பார்வையாளர்களை ஆச்சரியப்பட வைத்ததாகவும் விமர்சனங்கள் எழுந்ததாகவும், ரிப்பன் பில்டிங் அதிகாரிகளிடையே இது சர்ச்சையைக் கிளப்பியதாகவும் கூறப்பட்டது.
தற்போது தபேதார் மாதவியின் பணியிட மாறுதலுக்கு இதைக் காரணமாக காட்டி சமூக வலைத்தளங்களில் தீயாய் செய்தி பரவி வருகிறது. மாதவியின் இது போன்ற நடவடிக்கைகளை அறிந்த மேயரின் தனி உதவியாளர் சிவசங்கர் என்பவர் மாதவியை அழைத்து இது குறித்து விளக்கம் கேட்டு, உதட்டுக்கு லிப்ஸ்டிக் பூசிக் கொண்டு வரக் கூடாது என்று கண்டித்ததாகவும், தனி உதவியாளரின் பேச்சை கேளாமல் மாதவி அதன் பிறகும் லிப்ஸ்டிக் பூசியபடியே பணிக்கு வந்ததாகவும் கூறப்படுகிறது.
இதையடுத்து, இது குறித்து விளக்கம் அளிக்குமாறு கோரி கடந்த ஆகஸ்ட் 6ம் தேதி மாதவிக்கு மெமோவும் வழங்கப்பட்டுள்ளதாக கூறுகிறார்கள். அதற்கு பதில் அளித்த தபேதார் மாதவி, இது போன்ற அறிவுறுத்தல்கள் மனித உரிமைக்கு எதிரானது. யாரிடமும் பேசக்கூடாது, உதட்டுச் சாயம் அணியக்கூடாது என்று எந்த அரசாங்க உத்தரவும் இல்லை. அது போன்ற உத்தரவுகள் இருந்தால் காட்டுங்கள் என்று எதிர்த்து பேசியதாகவும், அதையே தமது விளக்கமாகவும் மேயரின் உதவியாளருக்கு அனுப்பி வைத்ததாகவும், மாதவியின் விளக்கத்தை ஏற்க மறுத்து, அவரை உடனடியாக மணலிக்கு இடமாற்றம் செய்து உத்தரவு பிறப்பிக்கப்பட்டதாகவும் சமூக வலைத்தளங்களில் செய்தி பரவியது.
இது குறித்த விசாரணையில் இறங்கிய போது, இது அத்தனையும் கட்டுக்கதை என்கிறார்கள் ரிப்பன் பில்டிங் அதிகாரிகள்.தபேதார் மாதவி பணியிட மாறுதலாகி இரண்டு மாதங்கள் ஆகிவிட்டது என்றும், இப்போது இது குறித்து தவறான தகவல்கள் எப்படி பரவி வருகிறது என தெரியவில்லை என்று கூறிய மூத்த அதிகாரி, இது போன்ற காரணங்களால் எல்லாம் அவர் பணியிட மாறுதல் செய்யப்படவில்லை என்றும், மாதந்தோறும் திடீர் திடீரென தொடர்ந்து அதிக நாட்கள் விடுமுறை எடுத்துக் கொள்கிற பழக்கம் அவருக்கு இருந்து வந்ததாகவும், சனிக்கிழமைக்களில் வர நேரும் பணி நாட்களில் தன்னால் பணிக்கு வர முடியாது என்று தொடர்ந்து கூறி வந்த நிலையில் தான் இந்த பணியிட மாறுதல் செய்யப்பட்டிருப்பதாகவும் கூறினார்.
இது தெரியாமல், 2 மாதங்களுக்கு முன்பே மணலிக்கு மாறுதலாகி சென்று விட்டவர் குறித்து, லிப்ஸ்டிக் பூசிக் கொண்டிருந்ததால் பணியிட மாறுதல் என்று தவறாக விசாரிக்காமலேயே பல இணையதளங்களில் செய்தி வெளியிட்டுக் கொண்டிருக்கிறார்கள் என்று ஆதங்கத்தை வெளிப்படுத்தினார் ரிப்பன் பில்டிங் அதிகாரி.
புரட்டாசி மாதத்தில் இத்தனை சிறப்புகளா? என்னென்ன வழிபாடுகள், பலன்கள் தெரியுமா?
செல்வம் நிலைத்திருக்க புரட்டாசி சனிக்கிழமை வழிபாடு, பலன்கள்!
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
புரட்டாசி மாதத்தில் ஏன் அசைவம் சாப்பிடக்கூடாது ... விஞ்ஞான விளக்கம்!