தூத்துக்குடி அருகே 1,850 கிலோ ரேஷன் அரிசி பதுக்கல்: வியாபாரி கைது; லோடு ஆட்டோ, பைக் பறிமுதல்
தூத்துக்குடி அருகே கள்ளச்சந்தையில் விற்பனை செய்வதற்காக 1,850 கிலோ ரேஷன் அரிசியைப் பதுக்கி வைத்திருந்த வியாபாரியை பறக்கும் படை அதிகாரிகள் கைது செய்தனர். மேலும், கடத்தலுக்குப் பயன்படுத்தப்பட்ட லோடு ஆட்டோ மற்றும் மோட்டார் சைக்கிளையும் பறிமுதல் செய்தனர்.

அதிகாரிகளுக்கு ரகசியத் தகவல்
தூத்துக்குடி அருகேயுள்ள பெரியநாயகிபுரம் பகுதியில் பொதுமக்களிடமிருந்து ரேஷன் அரிசியைக் குறைந்த விலைக்கு வாங்கி, அதனை கள்ளச்சந்தையில் அதிக விலைக்கு விற்பனை செய்வதாக அதிகாரிகளுக்கு ரகசியத் தகவல் கிடைத்தது.
இதையடுத்து பறக்கும் படை தனி தாசில்தார் முத்து, குடிமைப் பொருள் வழங்கல் தனி தாசில்தார் ஞானராஜ் மற்றும் தனி வருவாய் ஆய்வாளர்கள் மகாராஜா, வெங்கடேஷ், சதீஷ் ஆகியோர் அப்பகுதியில் ஆய்வு மேற்கொண்டனர்.

1,850 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல்
அப்போது அங்கு ரேஷன் அரிசி மூட்டைகள் பதுக்கி வைக்கப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. மொத்தம் 40 மூட்டைகளில் 1,850 கிலோ ரேஷன் அரிசி இருந்தது தெரியவந்தது. இதில் 50 கிலோ எடை கொண்ட 30 மூட்டைகளும், 35 கிலோ எடை கொண்ட 10 மூட்டைகளும் அடங்கும்.
இதையடுத்து அரிசி மூட்டைகள் அனைத்தையும் அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். மேலும், கடத்தலுக்குப் பயன்படுத்தப்பட்ட ஒரு லோடு ஆட்டோ மற்றும் மோட்டார் சைக்கிளையும் கைப்பற்றினர்.
வியாபாரி கைது
இந்தச் சம்பவம் தொடர்பாக மகேஷ் என்ற வியாபாரியை அதிகாரிகள் கைது செய்தனர். பின்னர் அவரை தூத்துக்குடி மாவட்ட குடிமைப் பொருள் வழங்கல் குற்றப் புலனாய்வுப் பிரிவு போலீசாரிடம் ஒப்படைத்தனர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
