தூத்துக்குடியில் பைக்கில் ஆடு திருட முயன்ற தந்தை-மகன்!

 
ஆடு

 

தூத்துக்குடி மாவட்டம் புதுக்கோட்டை அருகே பைக்கில் ஆட்டை திருடி தப்ப முயன்ற தந்தை-மகனை பொதுமக்கள் சுற்றிவளைத்து பிடித்து போலீசாரிடம் ஒப்படைத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

போலீஸ்

புதுக்கோட்டை அருகே உள்ள கூட்டாம்புளி பகுதியில் ஆடுகள் மேய்ந்து கொண்டிருந்தன. அப்போது அந்த வழியாக இருசக்கர வாகனத்தில் வந்த 2 பேர், அங்கிருந்த ஆடு ஒன்றை தூக்கி பைக்கில் ஏற்றிக்கொண்டு தப்ப முயன்றதாக கூறப்படுகிறது.இதை கவனித்த அப்பகுதி பொதுமக்கள் உடனடியாக அவர்களை சுற்றிவளைத்தனர். ஆட்டுடன் தப்ப முயன்ற இருவரையும் மடக்கிப் பிடித்த பொதுமக்கள், அவர்களை புதுக்கோட்டை போலீசாரிடம் ஒப்படைத்தனர்.

இதையடுத்து போலீசார் இருவரிடமும் விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர்கள் தூத்துக்குடி கணேசன் காலனியைச் சேர்ந்த கணேசன் மகன் ஆரோக்கிய அந்தோணி (43), அவரது மகன் அந்தோணி முத்து (20) என்பது தெரியவந்தது. இதைத்தொடர்ந்து இருவரையும் போலீசார் கைது செய்தனர்.

இதற்கிடையே, இருவரையும் பொதுமக்கள் தாக்கியதில் காயம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதையடுத்து அவர்கள் தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். போலீஸ் பாதுகாப்புடன் அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.பட்டப்பகலில் பைக்கில் வந்து ஆட்டை திருட முயன்ற தந்தை-மகன் பொதுமக்களிடம் சிக்கிய சம்பவம் கூட்டாம்புளி பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.